அபார வெற்றியுடன் டி20 உலகக் கோப்பையைத் தொடங்கிய இந்தியா

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் வருகிற ஜூன் 9 அன்று விளையாடவுள்ளது.
அபார வெற்றியுடன் டி20 உலகக் கோப்பையைத் தொடங்கிய இந்தியா
அபார வெற்றியுடன் டி20 உலகக் கோப்பையைத் தொடங்கிய இந்தியாANI

அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பையைத் தொடங்கியது இந்திய அணி.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் 8-வது ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று நியூயார்கில் விளையாடின.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அயர்லாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்டெர்லிங் மற்றும் பால்பிரின் ஆகியோர் அர்ஷ்தீப் சிங்கின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதன் மூலம் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக முதல் விக்கெட்டை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். முன்னதாக இவர் 2022 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணிக்காக முதல் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இதைத் தொடர்ந்து சிராஜ், பும்ரா, ஹார்திக் பாண்டியா என அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் அயர்லாந்து அணியை மிரட்டினர்.

இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் டக்கர் 10, டெக்டர் 4, கேம்பர் 12, டாக்ரெல் 3, அடைர் 3 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற, முடிவில் டெலானி மற்றும் லிட்டில் ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். இருப்பினும் அது போதுமான அளவிற்கு இல்லை என்று கூறலாம்.

16 ஓவர்கள் மட்டுமே விளையாடிய அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெலானி 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். லிட்டில் 13 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 97 என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. பலரும் எதிர்பார்த்தது போல ரோஹித் சர்மா - கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக வந்தனர்.

ஒருபக்கம் ரோஹித் சற்று நிதானமாக விளையாட கோலி 1 ரன்னில் அடைர் பந்தில் வெளியேறினார். இதன் பிறகு ரோஹித் சர்மா - ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்து அருமையாக விளையாடினர். ரோஹித் அதிரடியாக விளையாட ரிஷப் பந்த் பொறுமையாக விளையாடினார். ரோஹித் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரிஷப் பந்த் பெரிய ஷாட்களை அடிக்க பல முறை போராடிப் பார்த்தும் பந்து சரியாகப் படவில்லை.

இதன் பிறகு ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவருக்கு வலது கை தோள்பட்டையில் அடிப்பட்டது. இதனால் அவர் ஆட்டமிழக்காமலேயே வெளியேறினார். இதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார். முடிவில் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார் ரிஷப் பந்த். ஆட்டமிழக்காமல் விளையாடிய அவர், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இந்திய அணி 12.2 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் வருகிற 9 அன்று விளையாடவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in