
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் அஹமதாபாதில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் இந்த முறை பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் முஹமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. வருண் சக்ரவர்த்தி லேசான காயம் காரணமாக விளையாடவில்லை. அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள்.
சதமடித்த நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, மார்க் வுட் வீசிய முதல் பந்திலேயே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி சிறப்பாகக் கூட்டணி அமைத்தார்கள். முதல் பவர்பிளேயில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. அடித்தளம் அமைக்கப்பட்டவுடன், ரன் ரேட் படிப்படியாக உயரத் தொடங்கியது. ஷுப்மன் கில் 51 பந்துகளில் அரைசதம் அடித்தார். கோலி 50 பந்துகளில் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 116 ரன்கள் சேர்த்த நிலையில், கோலி 52 ரன்களுக்கு அடில் ரஷித் சுழலில் ஆட்டமிழந்தார்.
கோலி விக்கெட்டுக்கு பிறகு கில்லின் ஸ்டிரைக் ரேட் அதிகரித்தது. ஷ்ரேயஸ் ஐயரும் நேரம் எடுத்துக்கொள்ளாமல் வேகமாக ரன் குவிக்கத் தொடங்கினார். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 50 ரன்களை எடுத்தது.
அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணி 31-வது ஓவரிலேயே 200 ரன்களை தொட்டது. அஹமதபாத் மைதானம் என்றால் சதமடிப்பேன் என்று விடாப்பிடியாக இருக்கும் கில், இன்றைய ஆட்டத்தில் 95 பந்துகளில் சதம் அடித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 43 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அதே வேளையில் இருவரும் 3-வது விக்கெட் கூட்டணிக்கு 100 ரன்களை சேர்த்தார்கள். 102 பந்துகளில் 112 ரன்கள் எடுத்த கில், அடில் ரஷித் சுழலில் போல்டானார்.
கில் விக்கெட்டுக்கு பிறகு ரன் குவிக்கும் வேகத்தைக் குறைத்துக்கொள்ளாத ஷ்ரேயஸ் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 64 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தபோது, ரஷித் சுழலில் வைட் பந்தைத் தொட்டு ஆட்டமிழந்தார்.
கடைசி 10 ஓவர்களில் பெரிய அதிரடியை வெளிப்படுத்துவதற்கான சரியான அடித்தளம் அமைந்திருந்தது. எனினும், கேஎல் ராகுல் மட்டுமே சிறப்பாக பேட் செய்தார். இவரும் கடைசி ஓவர் வரை பேட் செய்யாமல் 29 பந்துகளில் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா உள்பட பின்வரிசையில் களமிறங்கிய பேட்டர்கள் அனைவரும் 20 ரன்களைகூட தொடவில்லை.
50 ஓவர்களில் இந்திய அணி 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அடில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மிகக் கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. வழக்கம்போல் ஃபில் சால்ட், பென் டக்கெட் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்கள். 5.2 ஓவர்களிலேயே இங்கிலாந்து 50 ரன்கள் எடுத்தது. 34 ரன்கள் எடுத்த டக்கெட், அர்ஷ்தீப் சிங் வேகத்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சால்டும் 23 ரன்களுக்கு அர்ஷ்தீப் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
டாம் பான்டன் மற்றும் ஜோ ரூட் கூட்டணியைக் கட்டமைக்கும் பணியைக் கையிலெடுத்தார்கள். சுழற்பந்துவீச்சைத் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை விளையாடி நெருக்கடி கொடுத்தார்கள். விடாமுயற்சியோடு பந்துவீசிய குல்தீப் யாதவ், பான்டன் விக்கெட்டை வீழ்த்தி கூட்டணியைப் பிரித்தார். இங்கிலாந்து நடுவரிசை திணறல் மீண்டும் தொடங்கியது. ஜோ ரூட்டும் 24 ரன்களுக்கு போல்டானார்.
ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்தியப் பந்துவீச்சாளர்களிடம் சரணடைந்தார்கள். கஸ் அட்கின்சன் மட்டும் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இவர் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்யாத இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஷுப்மன் கில் வென்றார்.