புனே டி20: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

பேஸ்பால் பாணியில் விளையாடுவதாலேயே இங்கிலாந்து தோற்பதாக எழும் விமர்சனங்களை ஊர்ஜிதப்படுத்தினார்கள்.
புனே டி20: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா
ANI
3 min read

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20யில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்காவது டி20 புனேயில் நடைபெற்றது. இந்தத் தொடரில் முதன்முறையாக டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் முஹமது ஷமி, துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்குப் பதில் அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், ஷிவம் துபே சேர்க்கப்பட்டார்கள். இங்கிலாந்து அணியில் மார்க் வுட்டுக்குப் பதில் சகிப் மஹ்மூத், ஜேமி ஸ்மித்துக்குப் பதில் ஜேக்கப் பெத்தெல் சேர்க்கப்பட்டார்கள்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அதிரடியைத் தொடக்கி வைத்தார். இரண்டாவது ஓவரை வீசிய சகிப் மஹ்மூத் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சனை வீழ்த்தினார். தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டுமொரு முறை ஷார்ட் ஆஃப் லெங்த் பந்தை மடக்கி அடிக்கப் பார்த்து ஸ்கொயர் லெக் பகுதியில் கேட்ச் ஆனார்.

இடக்கை, வலக்கை பேட்டர் என்ற யுத்தியில் விளையாடி வந்த இந்தியா, இந்த முறை சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தவுடன் திலக் வர்மாவையே களமிறக்கிவிட்டது. மூன்றாவது வரிசையில் களமிறங்கி அதகளம் புரிவதை வழக்கமாகக் கொண்டிருந்த திலக் வர்மா, இந்த முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மஹ்மூதின் ஹாட்ரிக் வாய்ப்பை சூர்யகுமார் யாதவ் தடுத்து நிறுத்தினாலும், இதே ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆனார். 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

எனினும், அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங் சற்று அதிரடி பாணியில் விளையாடி, நெருக்கடியை இங்கிலாந்து பக்கம் திருப்பிவிட்டார்கள். 6 ஓவர்களில் இந்திய அணி 47 ரன்கள் எடுத்தது. சுழற்பந்துவீச்சு வந்தவுடன் அடில் ரஷித் பந்தில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அபிஷேக் சர்மா. இதையடுத்து, சுழற்பந்துவீச்சைத் துவம்சம் செய்வதற்காகே ஷிவம் துபே களமிறக்கிவிடப்பட்டார்.

காயத்திலிருந்து மீண்டு அணியில் இடம்பிடித்த ரிங்கு சிங் பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 79 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தாலும் துபே மற்றும் ஹார்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 15 ஓவர்களில் இந்தியா 113 ரன்கள் எடுத்தது. 16-வது ஓவரில் ஹார்திக் பாண்டியா இரு சிக்ஸர்கள், 17-வது ஓவரில் பாண்டியா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி மற்றும் துபே ஒரு பவுண்டரி, 18-வது ஓவரில் பாண்டியா நோ-பாலில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் மற்றும் துபே ஒரு பவுண்டரி என நொறுக்கித் தள்ளினார்கள்.

27 பந்துகளில் அரைசதம் அடித்த பாண்டியா, 30 பந்துகளில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். துபே 19-வது ஓவரில் இரு பவுண்டரி விளாசினார். முதல் பந்தில் இங்கிலாந்து தவறவிட்ட கேட்ச் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட துபே 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரை ஜேமி ஓவர்டன் அற்புதமாக வீச, 2 விக்கெட்டுகளை இழந்து 3 ரன்களை மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் துபே 53 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

கடைசி 5 ஓவர்களில் இந்தியா 68 ரன்கள் விளாசியதால், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

ஷார்ட் பந்து தலையைத் தாக்கியதால், ஷிவம் துபே ஃபீல்டிங் செய்யவில்லை. இவருக்குப் பதில் மாற்று வீரராக (கன்கஷன் சப்) ஹர்ஷித் ராணா களமிறங்கினார். மோசமான ஃபார்மில் இருந்த ஃபில் சால்ட், அர்ஷ்தீப் சிங், பாண்டியா வீசிய முதலிரு ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார். இதன்பிறகு, அதிரடிக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட பென் டக்கெட், அர்ஷ்தீப் சிங் வீசிய அவருடைய இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார்.

சுழற்பந்துவீச்சை பவர்பிளேயில் அறிமுகம் செய்தும், பவர்பிளேயின் கடைசிப் பந்து வரை பலனில்லை. 5 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. 6-வது ஓவரின் கடைசி பந்தில் ரவி பிஷ்னாயிடம் 39 (19) வீழ்ந்தார் டக்கெட். அக்‌ஷர் படேல் வீசிய அடுத்த ஓவரிலேயே சால்ட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பட்லர், ரவி பிஷ்னாயிடம் வீழ்ந்தார். 67 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

10 ஓவர்களில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. கன்கஷன் சப் வீரராகக் களமிறங்கிய ராணா, தனது இரண்டாவது ஓவரிலேயே லியம் லிவிங்ஸ்டனை வீழ்த்தினார். ஜேக்கப் பெத்தெல் நின்று விளையாட, ஹாரி புரூக் இந்தத் தொடரில் முதன்முறையாக அதிரடியை வெளிப்படுத்தினார். ராணா ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி வருண் ஓவரில் ஒரு பவுண்டரி என விளாச இந்தத் தொடரின் முதல் அரைசதத்தை 25 பந்துகளில் எட்டினார்.

நல்ல நிலையில் விளையாடி வந்த அவர், அவசியமில்லாமல் வருண் சக்ரவர்த்தி பந்தில் ரேம்ப் ஷாட் விளையாடி ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த பிரைடன் கார்ஸும் தூக்கி அடிக்கப் பார்த்து இதே ஓவரில் டக் அவுட் ஆனார். ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து, தங்களுக்கு வேண்டாம் என்று கூறி ஆட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைத்ததைப்போல விளையாடினார்கள். பேஸ்பால் பாணியில் விளையாடுவதாலேயே இங்கிலாந்து தோற்பதாக எழும் விமர்சனங்களை ஊர்ஜிதப்படுத்தினார்கள்.

ராணாவின் குறைவான வேகத்தில் வீசப்பட்ட பந்தில் பெத்தெல் ஆட்டமிழந்தார். 4 ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட, ஜேமி ஓவர்டன் சற்று ஆறுதளித்தார். அடில் ரஷித்தும் அர்ஷீப் பந்தில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார்.

கடைசி இரு ஓவர்களில் 25 ரன்கள் தேவைப்பட, முதல் பந்தை ஓவர்டன் பவுண்டரிக்கு விரட்டினார். ஆடில் ரஷித் சிக்ஸர் அடித்திருந்தாலும், இரு பந்துகளில் ரன் எடுக்காமல் ஸ்டிரைக்கை தன்வசம் வைத்திருந்தார் ஓவர்டன். விளைவு நெருக்கடி அதிகரித்து, ராணாவின் மூன்றாவது விக்கெட்டாக போல்டானார். அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட, 4-வது பந்தில் மஹ்மூத் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. இந்திய அணியில் ரவி பிஷ்னாய், ஹர்ஷித் ராணா ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற நிலையில் வென்றுள்ளது. ரஞ்சி கோப்பையில் இரு இன்னிங்ஸிலும் டக் அவுட்டாகி மோசமான ஃபார்மில் இந்திய அணிக்குள் வந்த துபே, அரைசதம் அடித்ததால் ஆட்டநாயகன் விருத்துக்குத் தேர்வானார். இரு அணிகளுக்கிடையிலான கடைசி டி20 மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in