
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே இதுவே இந்தியாவின் பெரிய வெற்றி.
ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று மழையால் தாமதமாகத் தொடங்கியது. தாமதமாகத் தொடங்கினாலும் நான்காவது நாள் ஆட்டத்தில் புதிய பந்தில் மிக அற்புதமாகப் பந்துவீசிய ஆகாஷ் தீப், ஐந்தாவது நாளான இன்றும் அட்டகாசமான லைன், லெந்தில் பந்துவீசினார். தனது இரண்டாவது ஓவரில் ஆலி போப் விக்கெட்டை வீழ்த்தினார். மூன்றாவது ஓவரில் ஹாரி புரூக்கை நிலைகுலையச் செய்து எல்பிடபிள்யு முறையில் வெளியேற்றினார் ஆகாஷ் தீப்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் நிதானம் காட்டி கூட்டணி அமைத்தார்கள். ரவீந்திர ஜடேஜா ஓவருடன் உணவு இடைவேளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஜடேஜா வழக்கம்போல தனது ஓவரை மிக வேகமாக வீசியதால், கூடுதலாக ஒரு ஓவரை வீச இந்தியாவுக்கு நேரம் கிடைத்தது. வாஷிங்டன் சுந்தர் அந்த ஓவரை வீச, பென் ஸ்டோக்ஸ் (33 ரன்கள்) மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
கூடுதலாக கிடைத்த ஒரு ஓவரில் இந்தியாவுக்கு விக்கெட் கிடைத்ததால், உணவு இடைவேளைக்கு முன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கையில் இருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஜேமி ஸ்மித் மட்டும் அரை சதம் அடித்து அதிரடி காட்டி இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக இருந்தார். ஆகாஷ் தீப் வீசிய இரு ஷார்ட் பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பினார் ஸ்மித். அடுத்த பந்தை வேகத்தைக் குறைத்து ஷார்ட்டாக வீசினார் ஆகாஷ் தீப். இதைக் கணிக்காமல் பேட்டை முன்கூட்டியே விட்டு 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஜேமி ஸ்மித். ஆகாஷ் தீப்பின் 5-வது விக்கெட் இது.
பின்வரிசையில் பிரைடன் கார்ஸ் மட்டும் 38 ரன்கள் எடுத்தார். இந்திய ஃபீல்டர்கள் சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதால், இங்கிலாந்து பேட்டிங் சற்று நேரம் தாக்குப்பிடித்தது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப், பிரைடன் கார்ஸை கடைசி விக்கெட்டாக வீழ்த்தினார். இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஆகாஷ் தீப் இந்த டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரில் 1-1 என சமநிலையை அடைந்துள்ளது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 9 டெஸ்டுகளில் விளையாடியுள்ள இந்தியா முதன்முறையாக வெற்றியைப் பெற்றுள்ளது. ஷுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு பெறும் முதல் வெற்றி இது.
டெஸ்டில் வெற்றி பெற 20 விக்கெட்டுகள் தேவை. பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், பும்ரா இல்லாமலேயே பந்துவீச்சுக்கு பெரிய உதவி இல்லாத ஆடுகளத்தில் முஹமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் எழுச்சியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது இந்தியா.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10 அன்று தொடங்குகிறது. இதில் பும்ரா கட்டாயம் களமிறங்குவதாக ஷுப்மன் கில் அறிவித்துள்ளார். இந்த டெஸ்டில் மொத்தம் 430 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
முன்னதாக, இங்கிலாந்து, இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பிர்மிங்ஹமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 2 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் சாய் சுதர்சன், ஷார்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள்.
முதல் இன்னிங்ஸில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில்லின் இரட்டைச் சதத்தால் இந்திய அணி 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் பெரிய சதமடிக்க, மற்ற பேட்டர்களில் ஒருவர்கூட 25 ரன்களை தொடவில்லை. இந்திய அணியில் முஹமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் மற்றொரு பெரிய சதத்தால் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து வெற்றிக்கு 608 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 15 ஓவர்கள் பேட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா டிக்ளேர் செய்தது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் 24 ரன்களுடனும் ஹாரி புரூக் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.