
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20யில் இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு சுருண்டு 150 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்தியா 4-1 என டி20 தொடரை வென்றது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜாஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதில் முஹமது ஷமி சேர்க்கப்பட்டார்.
தொடக்க பேட்டர்களாக வழக்கம்போல் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினார்கள். இந்தத் தொடரில் ஷார்ட் மற்றும் ஷார்ட் ஆஃப் லெங்த் பந்துகளில் ஆட்டமிழந்து வந்த சஞ்சு சாம்சனுக்கு அதே திட்டத்துடன் இங்கிலாந்து களமிறங்கியது.
எனினும், இன்னிங்ஸின் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார் சஞ்சு சாம்சன். ஆர்ச்சர் வீசிய இதே ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 16 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். ஆனால், மார்க் வுட் வீசிய அடுத்த ஓவரில் முந்தைய ஆட்டங்களில் ஆட்டமிழந்ததைப்போல டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார் சஞ்சு சாம்சன். மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தைக் கையிலெடுத்தார் அபிஷேக் சர்மா. ஆர்ச்சர், மார்க் வுட், ஓவர்டன் என அனைவரது ஓவர்களிலும் சிக்ஸர்களை நொறுக்கினார். 17 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் அபிஷேக் சர்மா.
வேகத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பவர்பிளேயின் கடைசி ஓவரை லிவிங்ஸ்டனை வீசச் சொன்னார் பட்லர். இந்த ஓவரில் திலக் வர்மா இரு பவுண்டரிகள் விளாசினார். 6 ஓவர்களில் இந்தியா 95 ரன்கள் விளாசியது. பவர்பிளேயில் இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது. பவர்பிளே முடிந்தவுடன் அடில் ரஷித்தை அழைத்தும் பலனில்லை. இந்த ஓவரிலும் அபிஷேக் இரு சிக்ஸர்களை விளாசினார்.
9-வது ஓவரில் பிரைடன் கார்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய ஓவரிலும் அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால், திலக் வர்மா (24) விக்கெட்டை வீழ்த்தி கூட்டணியைப் பிரித்தார் கார்ஸ். 32 பந்துகளில் 94 ரன்களுக்கு விரைந்தாலும், 37-வது பந்திலேயே அபிஷேக் சர்மா சதமடித்தார். இந்தியா சார்பில் குறைவான பந்துகளில் சதமடித்தவர்களில் இரண்டாவது இடம் அபிஷேக் சர்மாவுக்கு.
இந்தத் தொடரில் மோசமாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். ஷிவம் துபே வந்தார். சுழற்பந்துவீச்சை நொறுக்கித் தள்ளிவிடுவார் என்பதால், இவர் களத்தில் இருக்கும் வரை வேகப்பந்துவீச்சை இங்கிலாந்து பயன்படுத்தியது. இன்று வேகப்பந்துவீச்சையும் துபே விளாசினார். 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து 14-வது ஓவரில் துபே ஆட்டமிழந்தார். பாண்டியா 9 ரன்களுக்கு 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 16-வது ஓவரில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நீண்ட நேரம் ஸ்டிரைக்குக்கு வர முடியாமல் இந்திய பேட்டர்கள் ஆட்டமிழப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அபிஷேக், கடைசி நேரத்தில் மீண்டும் அதிரடி காட்டத் தொடங்கினார். 17-வது ஓவரில் இந்தியா 200 ரன்களை கடந்தது. 18-வது ஓவரின் கடைசி பந்தில் அடில் ரஷித்திடம் ஆட்டமிழந்தார் அபிஷேக் சர்மா. 54 பந்துகளில் 7 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள் உள்பட 135 ரன்கள் விளாசினார். இதன்மூலம், சர்வதேச டி20யில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, டி20யில் இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் என்ற ஷுப்மன் கில் சாதனையையும் முறியடித்துள்ளார்.
கடைசி இரு ஓவர்களில் இந்தியாவால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நடுவரிசை பேட்டர்கள் சற்று அதிரடி காட்டியிருந்தால், கடைசி நேரத்தில் அதிரடி காட்ட பேட்டர்கள் இருந்திருப்பார்கள். இது நடக்காததால், இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்களுக்கு கட்டுப்பட்டது.
248 ரன்கள் வெற்றி இலக்கு என்பதால், முதல் பந்திலிருந்தே அதிரடிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இங்கிலாந்துக்கு இருந்தது. முஹமது ஷமி வீசிய முதல் மூன்று பந்துகளில் ஃபில் சால்ட் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். ஹார்திக் பாண்டியா இரண்டாவது ஓவரை அற்புதமாக வீசி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
மற்றொரு தொடக்க பேட்டர் பென் டக்கெட் தனது முதல் பந்திலேயே ஷமியிடம் வீழ்ந்தார். சால்ட் தொடர்ந்து அதிரடி காட்டினாலும், மற்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பு இல்லை. 5-வது ஓவரிலேயே வருண் சக்ரவர்த்தி அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே பட்லர் ஆட்டமிழந்தார். 6-வது ஓவரில் பிஷ்னாய் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த ஓவரில் ஹாரி புரூக் ஸ்வீப் ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார். 6 ஓவர்களில் இங்கிலாந்து 68 ரன்கள் விளாசினாலும், மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
வருண் சக்ரவர்த்தி தனது இரண்டாவது ஓவரில் லிவிங்ஸ்டன் விக்கெட்டை வீழ்த்தினார். சால்ட் மட்டும் விடாமுயற்சியோடு அதிரடி காட்டி 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், ஷிவம் துபே வீசிய முதல் பந்திலேயே சால்டும் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, யார் பந்துவீச வந்தாலும் பரிசாக விக்கெட்டை கொடுப்போம் என இங்கிலாந்து பேட்டர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்கள். அபிஷேக் சர்மா ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெறும் 10.3 ஓவர்கள் மட்டும் தாக்குப்பிடித்த இங்கிலாந்து 97 ரன்களுக்கு சுருண்டது. 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. ஆட்டநாயகன் விருதை அபிஷேக் சர்மாவும் தொடர் நாயகன் விருதை வருண் சக்வர்த்தியும் வென்றார்கள்.
டி20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. முதல் ஆட்டம் பிப்ரவரி 6 அன்று நடைபெறுகிறது.