இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா!

நடப்பு டி20 உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்திக்காத இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இறுதிச் சுற்றில் மோதுகின்றன.
இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா!
ANI

டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் கயானாவில் மோதின. எதிர்பார்த்ததைப்போலவே ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மழை தனது ஆட்டத்தைக் காண்பித்தது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கியிருக்க வேண்டும்.

மழை காரணமாக இரவு 8.45 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியதாகக் கூறினார்.

இரவு 9.10 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இரு அணிகளும் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் களமிறங்கின. ரீஸ் டாப்லி வீசிய இரண்டாவது பந்திலேயே ரோஹித் சர்மா அதிரடிக்கான முனைப்பை வெளிப்படுத்தினார். பந்து எதிர்பார்த்த திசையில் செல்லாவிட்டாலும், எதிர்பார்த்த முடிவாக பவுண்டரி கிடைத்தது. முதல் ஓவரில் 6 ரன்கள். ஆர்ச்சர் ஓவரின் கடைசிப் பந்தையும் பவுண்டரியுடன் நிறைவு செய்தார் ரோஹித்.

கோலியும் தனது இரண்டாவது பந்திலேயே இறங்கி வந்து பெரிய ஷாட்டுக்கு முயற்சித்தார். பேட்டில் படவில்லை. இருந்தபோதிலும், இந்தப் போட்டியில் ரன் அடிக்கவில்லையே என்கிற அழுத்தம் எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் துணிச்சலுடன் விளையாடியது அணியின் போக்கை வெளிப்படுத்தியது.

டாப்லி வீசிய மூன்றாவது ஓவரில் மிரட்டலாக ஒரு சிக்ஸர் அடித்தார் கோலி. டாப்லி உடனடியாக லெங்தை சற்று இழுத்து வீசினார். இது கோலியின் பேட்டில்படாமல் ஸ்டம்புகளை தகர்த்தது. 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கோலி.

ரோஹித் சர்மா அங்கும், இங்கும் பேட்டைவிட்டு ரன்களை எடுத்தார். இது அவ்வப்போது பவுண்டரியையும் கொடுத்தது. 5 ஓவர்களில் 40 ரன்களை அடைந்தது இந்தியா. பவர்பிளேயின் கடைசி ஓவரை வீச சாம் கரன் வரவழைக்கப்பட்டார். இவர் இரண்டாவது பந்திலேயே பந்த் விக்கெட்டை வீழ்த்தினார்.

6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 46 ரன்கள் எடுத்தது.

நடு ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அடில் ரஷித்தை இரு பவுண்டரிகளுடன் வரவேற்றார் ரோஹித் சர்மா.

கிறிஸ் ஜோர்டன் வந்தவுடன் சூர்யகுமார் தனக்குப் பிடித்தமான பின்பக்கத்தில் சிக்ஸர் அடித்தார். 8 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் சென்றுகொண்டிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரவு 11.40 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

மழை இடைவெளியில் பந்து நன்கு திரும்பத் தொடங்கியது. லிவிங்ஸ்டன் மற்றும் அடில் ரஷித்தை எதிர்கொள்வது ரோஹித்துக்கும், சூர்யகுமாருக்கும் சவாலாக இருந்தது. அப்படி இருந்தும், லிவிங்ஸ்டன் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் ரோஹித். எனினும், இந்திய அணியின் ரன் ரேட் 8-க்கு கீழ் குறையத் தொடங்கியது.

மீண்டும் வந்தார் சாம் கரன். இவரை அன்புடன் வரவேற்று சூர்யகுமார் ஒரு சிக்ஸரும், ரோஹித் ஒரு சிக்ஸரும் விளாசினார்கள். சிக்ஸர் மூலம் 36 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித் சர்மா.

சாம் கரன் ஓவரில் 19 ரன்கள் கிடைத்ததால், 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 110 ரன்களை அடைந்தது. 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால், கடைசி 7 ஓவர்களில் விளாசலாம் என்கிற முனைப்புடன் அடில் ரஷித் பந்தை அடிக்கப் பார்த்து போல்டானார் ரோஹித். இவர் 39 பந்துகளில் இரு சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் எடுத்தார். ரோஹித் - சூர்யா கூட்டணி 50 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தது.

ரோஹித் விக்கெட்டுக்கு பிறகு ரன் வேகம் சரியத் தொடங்கியது. இங்கிலாந்து ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தது. ஆடுகளம் மந்தமானதை உணர்ந்து, வேகத்தைக் குறைத்து வீசத் தொடங்கினார்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். இந்த வலையில் சிக்கி 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ்.

ஷிவம் துபே கீழே இறக்கப்பட்டு ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா முன்கூட்டியே களமிறக்கப்பட்டார்கள்.

17 ஓவர்களில் 132 ரன்கள் என இந்திய அணியின் ரன் ரேட் 8-க்கு கீழ் குறைவாக இருந்தது. ஜோர்டன் ஓவரில் அடுத்தடுத்து இரு தீயான சிக்ஸர்களை அடித்த பாண்டியா, அடுத்த பந்திலேயே மூன்றாவது சிக்ஸருக்கு முயன்று கரனிடம் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய துபே முதல் பந்திலேயே நடையைக் கட்டினார்.

கடைசி இரு ஓவர்களில் ஜடேஜாவும், அக்‌ஷர் படேலும் மிக அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். ஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா இரு பவுண்டரிகள் அடித்தார். இதனால், 12 ரன்கள் கிடைக்க, இந்திய அணி 150 ரன்களை கடந்தது.

கடைசி ஓவரில் ஓடியே ரன்கள் எடுத்துவிடலாம் என்று விளையாட, ஜோர்டன் குறைவான வேகத்தில் வீசிய 4-வது பந்தை அக்‌ஷர் படேல் ஒற்றைக் கையில் சிக்ஸருக்கு அனுப்பினார். இந்திய அணி 170-ஐ தொட்டது. அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழக்கவும் செய்தார்.

இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி பெரிய அதிரடியைக் காட்டாதபோதிலும், 53 ரன்களை சேர்த்தது முக்கிய அம்சமாக அமைந்தது.

172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பட்லரும், சால்டும் களமிறங்கினார்கள்.

இருவரையும் ஆஃப் சைடில் அடிக்க அனுமதிக்காமல், ஸ்டம்ப் லைனில் பந்துவீசத் திட்டமிட்டது இந்திய அணி. அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை திட்டப்படி வீசியபோதும், பட்லர் - சால்ட் இணை 5 ரன்களை சேர்த்தது.

பும்ரா ஓவரில் பவுண்டரி, அர்ஷ்தீப் ஓவரில் இரு பவுண்டரிகள் என பட்லர் ஆட்டத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

உடனடியாக, பும்ராவை நிறுத்தி அக்‌ஷர் படேலை அழைத்தார் ரோஹித். இவரது முதல் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து நெருக்கடி கொடுக்க முயன்று பட்லர் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பட்லர் ஆட்டமிழந்தவுடன் பவர்பிளேயில் இரண்டாவது ஓவரை வீச பும்ரா வரவழைக்கப்பட்டார். இவர் ஆஃப் கட்டர் வீசி சால்டை போல்ட் செய்தார். அக்‌ஷர் படேல் தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவையும் போல்ட் செய்து அசத்தினார்.

பவர்பிளேயின் முதல் மூன்று ஓவர்களில் 26 ரன்கள் எடுத்த இங்கிலாந்து, அடுத்த மூன்று ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

பந்து திரும்பும்போது குல்தீப் பந்துவீசாமல் இருப்பாரா? பவர்பிளே முடிந்தகையோடு குல்தீப் யாதவ் வந்தார். இங்கிலாந்தில் பட்லருக்குப் பிறகு முனைப்பைக் காட்டி விளையாடியது ஹாரி புரூக். குல்தீப் ஓவரின் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்தார்.

இடக்கை பேட்டரான மொயீன் அலி இருந்தால், இடக்கை சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருந்தது. இதற்கு மொயீன் அலியே வழிவகுத்துக் கொடுத்தார். அக்‌ஷர் படேல் வீசிய 8-வது ஓவரின் முதல் பந்தை ஃபிளிக் செய்ய முயன்று ஸ்டம்பிங் முறையில் வெளியேறினார். இதனால், மீண்டும் ஒரு இடக்கை பேட்டர் களமிறக்கப்பட்டார். குல்தீப் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்திலேயே ரெவ்யூவை வீணடித்து 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சாம் கரன். 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை மட்டுமே இங்கிலாந்து எடுத்தது.

குல்தீப் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பவுண்டரி அடித்த புரூக், மீண்டும் ரிவர்ஸ் ஷாட்டுக்கு முயன்று போல்டானார். இவர் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். குல்தீப் தனது கடைசி ஓவரை ஜோர்டன் விக்கெட்டை வீழ்த்தி நிறைவு செய்தார்.

கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டன. 16 பந்துகளை எதிர்கொண்டு களத்திலிருந்த லிவிங்ஸ்டனை தவறான அழைப்பால் ரன் அவுட் ஆக்கினார் ஆர்ச்சர். இங்கிலாந்தின் கடைசி நம்பிக்கை பேட்டரான இவரும் வெளியேறினார்.

ஆர்ச்சர் மட்டும் பேட்டை சுழற்றிக்கொண்டு சிக்ஸர்களும், பவுண்டரியும் அடித்தார். 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த ஆர்ச்சர், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. இதன்மூலம், 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம், நடப்பு டி20 உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்திக்காத இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இறுதிச் சுற்றில் மோதவுள்ளன. இந்த ஆட்டம் பார்பேடாஸில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in