
பிஜிடி டெஸ்ட் தொடரை இமாலய வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்டுகள் கொண்ட பிஜிடி தொடர், கடந்த வெள்ளியன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குச் சுருண்டாலும் ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்குக் கட்டுப்படுத்தி 46 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது இன்னிங்ஸில் அமர்க்களமாக பேட்டிங் செய்தது இந்தியா. ஜெயிஸ்வால் 161 ரன்களும் கோலி ஆட்டமிழக்காமல் 100 ரன்களும் எடுத்தார்கள். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கடைசிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் 38 ரன்கள் எடுத்தார்.
534 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி. அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாகக் காட்சியளித்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. சிராஜின் அற்புதமான பந்துவீச்சில் கவாஜா 4 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அசத்தலாக விளையாடிய ஹெட் அரைசதம் அடிக்க, அவருடன் கூட்டணி அமைத்த மிட்செல் மார்ஷும் சிறப்பாக விளையாடினார். இருவரும் சேர்ந்து 82 ரன்கள் சேர்க்க ஹெட் 89 ரன்களில் பும்ரா பந்தில் வெளியேறினார். அடுத்ததாக மிட்செல் மார்ஷும் 47 ரன்களில் நிதிஷ் ரெட்டி பந்தில் வெளியேறினார். நிதிஷ் ரெட்டியின் முதல் டெஸ்ட் விக்கெட்டாக இது அமைந்தது.
இதன் பிறகு அலெக்ஸ் கேரி ஒருபக்கம் தனியாக போராடி ரன்களைச் சேர்க்க, மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் விக்கெட்டுகளை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். கடைசி வரை விளையாடிய கேரி 36 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸி. அணி 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் டிசம்பர் 6 அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ளது.