ரோஹித் அதகளம்: ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அரையிறுதிக்குள் நுழையும்.
ரோஹித் அதகளம்: ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா
ANI
4 min read

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தோல்வியைச் சந்திக்காத அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் செயின்ட் லூசியாவில் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்து ஸ்டார்க்கை அணியில் சேர்த்தார்.

முதல் ஓவரில் ரோஹித் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார். இரண்டாவது ஓவரை வீசிய ஹேசில்வுட் ஷார்ட் பந்து மூலம் விராட் கோலியை டக் அவுட் செய்தார். முதலிரு ஓவர்களில் இந்திய அணி 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவிடம் ஆட்டத்தை அடித்துப் பிடுங்கினார். முதல் 4 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி. போதாதென்று கடைசிப் பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பி 29 ரன்களுடன் ஸ்டார்க் ஓவரை நிறைவு செய்தார் ரோஹித் சர்மா.

ANI

இந்த அதிரடியால் 5-வது ஓவரில் கம்மின்ஸை வரவழைத்தார் மார்ஷ். மண்டியிட்டு சிக்ஸர் அடித்து வரவேற்றார் ரோஹித் சர்மா. 5 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்தது இந்தியா. இதில் ரோஹித் சர்மா அடித்த ரன்கள் மட்டும் 50. 19 பந்துகளில் அரைசதம் அடித்து, நடப்பு டி20 உலகக் கோப்பையின் அதிவேக அரைசதம் என்ற சாதனை புரிந்தார்.

6 ஓவர்களில் இந்திய அணி 60 ரன்கள் எடுத்தது. இதில் 3 ஓவர்கள் வீசி ஹேசில்வுட் கொடுத்த ரன்கள் வெறும் 10.

பவர்பிளே முடிந்தவுடன் ரன் வேகம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஆடம் ஸாம்பாவை சிக்ஸர் அடித்து வரவேற்றார் ரிஷப் பந்த். ரோஹித் சர்மாவும் ஒரு சிக்ஸர் அடித்ததால், நடு ஓவர்களில் யாரைக் கொண்டு சமாளிப்பது என மார்ஷ் திணறினார்.

ஆஸ்திரேலியாவின் 5-வது பந்துவீச்சாளர் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டாய்னிஸ். வேறுவழியின்றி ஸ்டாய்னிஸை அழைத்தார். ரோஹித் சர்மா அடுத்தடுத்த பந்துகளில் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்கள் அடித்து நொறுக்கினார். இதே ஓவரில் ரிஷப் பந்த் (15) ஆட்டமிழந்தாலும், ஆஸ்திரேலியாவுக்குப் பெரிய கொண்டாட்டம் இல்லை.

காரணம், ரோஹித் தனது அதிரடியை துளியளவுகூட நிறுத்தவில்லை. 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது இந்தியா. சூர்யகுமார் யாதவும் அதிரடியில் இணைந்தார்.

இதனால், ஸ்டார்க் பந்துவீச வரவழைக்கப்பட்டார். முந்தைய ஓவரில் 29 ரன்கள் கொடுத்திருந்தாலும், இந்த ஓவரில் அற்புதமான யார்க்கர் பந்தை வீசி ரோஹித்தை போல்ட் செய்தார் ஸ்டார்க். ரோஹித் சர்மா 41 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 92 ரன்கள் விளாசினார்.

ANI

ரோஹித் விக்கெட்டுக்கு பிறகு சூர்யகுமார் யாதவும், துபேவும் சற்று அதிரடி காட்டினார்கள். 14 ஓவர்களில் இந்திய அணி 155 ரன்கள் என்ற நிலையை அடைந்தது. 15-வது ஓவரில் மீண்டும் ஸ்டார்க் வரவழைக்கப்பட்டார். இந்த முறை சூர்யகுமார் யாதவ் (31) விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை அளித்தார் ஸ்டார்க்.

இதன்பிறகு, இந்திய அணியின் ரன் வேகம் சரியத் தொடங்கியது. 16 மற்றும் 17-வது ஓவரில் ஒரு பவுண்டரிகூட இல்லை. 18-வது ஓவரை வீசிய கம்மின்ஸும் ஒரு பவுண்டரியை மட்டுமே கொடுத்தார்.

ஸ்டாய்னிஸ் வீசிய 19-வது ஓவரை பயன்படுத்தி முதலிரு பந்துகளில் மிரட்டலாக இரு சிக்ஸர்களை அடித்தார். சிக்ஸர்கள் கொடுத்த ஸ்டாய்னிஸ் இந்த ஓவரில் துபே (28) விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரை கம்மின்ஸ் சிறப்பாக வீசினாலும், ஜடேஜா ஒரு பந்தை கால் திசையில் அற்புதமாக சிக்ஸருக்கு அனுப்பினார். இந்த சிக்ஸரால் கடைசி ஓவரில் 10 ரன்கள் கிடைத்தன.

200 ரன்களை கடந்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. பாண்டியா 27 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

அனைத்துப் பந்துவீச்சாளர்களும் குறைந்தபட்சம் ஓவருக்கு 10.2 ரன்களை வழங்கிய இந்த இன்னிங்ஸில் ஹோஷ் ஹேசில்வுட் மட்டும் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

ANI

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. 4-வது பந்தில் பவுண்டரி கொடுத்தாலும், அடுத்த பந்தில் வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங்.

ANI

இரண்டாவது ஓவரை வீசிய பும்ராவும் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். மிட்செல் மார்ஷ் ஒரு ஷார்ட் பந்தை சரியான நேரத்தில் மடக்கி அடிக்காமல்போனது கேட்ச் ஆகியிருக்கும். ஆஸ்திரேலிய அணி சற்று பதற்றமாக இருந்ததை இதில் உணர முடிந்தது.

இதே மார்ஷ் அடுத்த ஓவரிலிருந்து ஆட்டத்தை அப்படியே மாற்றினார். நெருக்கடியை இந்தியா பக்கம் மடைமாற்றிவிட்டார். அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார்.

முதல் 3 ஓவர்களில் 3 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ரன் கணக்கைத் தொடங்காமல் இருந்த டிராவிஸ் ஹெட், பும்ரா ஓவரில் 3 பவுண்டரி அடித்து மிரட்டலைத் தொடங்கினார்.

அக்‌ஷர் படேல் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார் மார்ஷ். பவர்பிளேயின் கடைசி ஓவரை வீசிய ஹார்திக்கை இரு சிக்ஸர்கள் அடித்து வரவேற்றார் ஹெட். இந்தியாவைப்போல முதலிரு ஓவர்களில் தடுமாறினாலும், பவர்பிளேவை அதிரடியாக நிறைவு செய்து, 6 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவில் ஹேசில்வுட் செய்த பணியை இந்திய அணியில் குல்தீப் யாதவ் செய்தார். முதல் ஓவரில் ரன்களை கொடுக்காமல், இரண்டாவது ஓவரில் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தி கூட்டணியைப் பிரித்தார். அக்‌ஷர் படேலின் மிரட்டலான கேட்சில் மார்ஷ் ஆட்டமிழந்தார்.

ஆனால், இந்தியா அணுகூலத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஹெட், ஹார்திக் ஓவரை குறிவைத்து 3 பவுண்டரிகளை விளாசினார். 24 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 99 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் வந்தவுடன் ஜடேஜாவை அழைத்தார் ரோஹித். ஆனால், மேக்ஸ்வெல் மிகச் சாமர்த்தியமாக ரிவர்ஸ் ஹிட் மூலம் சிக்ஸர், பவுண்டரி அடித்து அதகளப்படுத்தினார்.

வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் சரியாக ஓவருக்கு 10 என்ற நிலையில் இருந்ததால், ஆட்டம் சரிசமமாக இருந்தது. ஓவருக்கு ஒரு பவுண்டரி என்பது ஆஸ்திரேலியாவின் திட்டமாக இருந்தது. குல்தீப் ஓவரில் பவுண்டரி போகாமல் இருந்த நிலையில், கடைசிப் பந்தை சிக்ஸருடன் நிறைவு செய்தார் ஹெட்.

அக்‌ஷர் படேல் 13-வது ஓவரை ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் நிறைவு செய்தார். இந்த நெருக்கடி மேக்ஸ்வெல்லை, குல்தீப் வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தை கிரீஸுக்கு வெளியே வந்து விளையாடச் செய்தது. ஆனால், மேக்ஸ்வெல் கூக்ளியை கணிக்காமல் பந்தைத் தவறவிட்டார். பந்து ஸ்டம்புகளை தகர்த்தது.

ANI

15-வது ஓவரை வீசிய அக்‌ஷர் படேல் முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸை வீழ்த்தினார். இந்த ஓவரிலும் வெறும் 6 ரன்களை மட்டுமே அவர் கொடுத்தார்.

கடைசி 5 ஓவர்களில் 65 ரன்கள் தேவைப்பட, அர்ஷ்தீப் சிங்கும் அற்புதமாகப் பந்துவீசி வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார். 17-வது ஓவரை வீசிய பும்ரா இந்த முறை ஹெட்டுக்கு பந்தின் வேகத்தைக் குறைத்து வீசினார். ஹெட் முன்கூட்டியே பேட்டைவிட்டு ஆட்டமிழந்தார். இவர் 43 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.

டிம் டேவிட் 18-வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்தாலும், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை 18-வது ஓவரிலேயே தகர்ந்தது.

176 ரன்கள் எடுத்தால், நெட் ரன் ரேட்டில் ஆப்கானிஸ்தானுக்குக் கீழே செல்லாமல் இருக்கலாம் என்ற கணக்கு ஆஸ்திரேலியாவுக்கு இருந்தது. இதன்படி, கடைசி இரு ஓவர்களில் 14 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தோல்வியைச் சந்திக்காத அணியாக இந்தப் பிரிவிலிருந்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

அரையிறுதிக்குள் நுழையப்போகும் இரண்டாவது அணி யார்?

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மோதுகின்றன. இதில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், முதல் பிரிவிலிருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழையும். வங்கதேசம் 160 ரன்கள் அடித்து, 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் அரையிறுதிக்குள் நுழையும். வங்கதேசம் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழையும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in