முதல் டெஸ்ட்: 46 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

டெஸ்டில் இந்திய அணியின் 3-வது குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்துள்ளது.
முதல் டெஸ்ட்: 46 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!
@BLACKCAPS
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதல் திணறியது இந்திய அணி.

வில் ஒ ரோர்க், மேட் ஹென்றி ஆகியோர் அசத்தலாக பந்துவீசி இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தனர்.

ரோஹித் சர்மா 2 ரன்களில் வெளியேற விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இதன் பிறகு ஜெயிஸ்வால் 13 பந்துகளில் வெளியேறினார். 63 பந்துகள் எதிர்கொண்ட ஜெயிஸ்வாலுடன் எவரும் பெரிய கூட்டணியை அமைக்கவில்லை.

இதன் பிறகு ராகுல் மற்றும் ஜடேஜாவும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். முதல் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்தது. நிதானமாக விளையாடிய ரிஷப் பந்த் 5 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இதைத் தொடர்ந்து 2-வது பகுதியின் முதல் பந்திலேயே அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த ரிஷப் பந்தும் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு பும்ரா 2 ரன்களிலும், குல்தீப் யாதவ் 1 ரன்னிலும் வெளியேற இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியில் 5 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். மேலும், சொந்த மண்ணில் முதல் 7 பேட்டர்களில் 4 பேர் டக் அவுட் ஆவது இதுவே முதல் முறை. டெஸ்டில் இந்திய அணியின் 3-வது குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்துள்ளது. மேலும், ஆசிய மைதானங்களில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் எனும் மோசமான சாதனையை படைத்துள்ளது இந்திய அணி.

நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில் ஒ ரோர்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேட் ஹென்றி டெஸ்டில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in