
இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ருதுராஜ், அபிஷேக் சர்மா ஆகியோர் இடம் பெறாததால் ரசிகர்கள் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் செல்கிறது. இத்தொடர் ஜூலை 27 அன்று தொடங்கி ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது.
டி20 ஆட்டங்கள் அனைத்தும் பல்லேகலேவிலும், ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதில் ருதுராஜ் கெயயிக்வாட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில், ருதுராஜ் தான் விளையாடிய மூன்று ஆட்டங்களில் முறையே 7, 77*, 49 ரன்கள் எடுத்தார். அதேபோல அபிஷேக் சர்மா இத்தொடரில் சதம் அடித்து அசத்தினார். இதனால் இலங்கை தொடரில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பேசுபொருளாக மாறியுள்ளது.
கடைசி 7 டி20 ஆட்டங்களில் 71.2 சராசரியுடன் 356 ரன்கள் எடுத்துள்ளார் கெயிக்வாட். எனவே, தனக்கு கிடைத்த வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தியும் அணியில் இடம்பெறாதது ஏன்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி ருதுராஜ் மற்றும் கில் ஆகியோரின் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டும் விவாதித்து வருகின்றனர்.
இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் ஏதோ அரசியல் உள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.