2-வது நாளிலும் அசத்திய இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி@icc
1 min read

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சதீஷ் சுபா 69 ரன்களும், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 68 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 49 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 66 ரன்களும் எடுத்தனர். முதல் நாள் முடிவில் தீப்தி சர்மா 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில் 2-வது நாளின் தொடக்கத்திலேயே தீப்தி சர்மா 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து லாரென் பெல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரேணுகா சிங் 1 ரன்னிலும், ராஜேஸ்வரி கயக்வாட் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 428 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் பெல் மற்றும் எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து  அணியில் நாட் சிவர் 70 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தவிர வேறு யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை.  இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 35.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 136 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

இதன் பிறகு இந்திய அணி ஃபாலோ ஆனை வழங்காமல் மீண்டும் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸில் ஸ்மிரிதி மந்தனா 26 ரன்களிலும் ஷஃபாலி வர்மா 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்ஸில் அசத்திய ஜெமீமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, யாஸ்திகா பாட்டியா ஆகியோர் முறையே 27, 20, 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 2-வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கெளர் 44 ரன்களுடனும் பூஜா வஸ்த்ரகர் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 478 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in