ரிஷப் பந்துக்கு எலும்பு முறிவு: 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க அறிவுரை! | Rishabh Pant |
இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் 6 வாரங்களுக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தவுடன் ரிஷப் பந்த் களமிறங்கினார். சாய் சுதர்சனுடன் இணைந்து நல்ல கூட்டணியை அமைத்து விளையாடி வந்தார்.
68-வது ஓவரில் 37 ரன்களுடன் நன்றாக பேட் செய்துகொண்டிருந்தபோது, ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுக்கு முயன்றார். அப்போது அவருடைய காலில் காயம் ஏற்பட்டது. ஷுவில் பட்ட பந்து, அவர் காலைப் பதம் பார்த்து ரத்தம் வரச் செய்து வீக்கத்தையும் உண்டாக்கியது.
இதனால் வலியால் துடித்த ரிஷப் பந்த் வேறு வழியில்லாமல் ரிடையர்ட் ஹர்ட் ஆனார். நடக்கவே முடியாமல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஸ்கேன் செய்வதற்காக ரிஷப் பந்த் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ அதிகாரபூர்வமாக நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், ரிஷப் பந்த் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்கேன் முடிவுகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி மாத்திரையைக் கொடுத்து, அவரை மீண்டும் பேட்டிங் மட்டும் செய்ய வைக்க முடியுமா என்பது குறித்து மருத்துவக் குழு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருந்தபோதிலும், நடப்பதற்கு அவர் துணை தேடி வருவதால் அதற்கான வாய்ப்பு குறைவு தான் என்றும் கூறப்படுகிறது.
லார்ட்ஸ் டெஸ்டின்போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பேட்டிங் மட்டுமே செய்தார். துருவ் ஜுரெல்தான் அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பிங் செய்தார்.
தற்போது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஓவல் டெஸ்டிலிருந்தும் ரிஷப் பந்த் விலகவுள்ளார். மாற்று விக்கெட் கீப்பராக இஷான் கிஷனை இங்கிலாந்துக்கு அழைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. ஓவல் டெஸ்ட் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது.
இந்கிய அணியில் ஏற்கெனவே நிதிஷ் குமார் ரெட்டி முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக நான்காவது டெஸ்டில் சேர்க்கப்படவில்லை.
Ind v Eng | India v England | Ind vs Eng | India vs England | Yashasvi Jaiswal | Sai Sudharsan | KL Rahul | Rishabh Pant | Ben Stokes | Anshul Kamboj | Liam Dawson | Old Trafford | Old Trafford Test | Manchester | Manchester Test | Pant Injury | India Tour of England | India England Series | Pant Fracture | Rishabh Pant Injury | Rishabh Pant ruled out | Ishan Kishan