பரபரப்பான கடைசி நாளுக்குத் தயாரான லார்ட்ஸ் டெஸ்ட்!

நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து செய்ததை, இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா செய்தது. நேற்று இந்தியா செய்ததை, இன்று இங்கிலாந்து செய்தது.
பரபரப்பான கடைசி நாளுக்குத் தயாரான லார்ட்ஸ் டெஸ்ட்!
ANI
2 min read

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்துக்கு ஒரு ஓவர் மட்டுமே இந்திய அணியால் வீச முடிந்தது. இங்கிலாந்து விக்கெட்டை இழக்காமல் 2 ரன்கள் எடுத்திருந்தது.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முதல் ஸ்பெல்லில் பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் பென் டக்கெட் (12) மற்றும் ஆலி போப் (4) விக்கெட்டுகளை வீழ்த்தி முஹமது சிராஜ் அற்புதமான தொடக்கத்தைக் கொடுத்தார். இந்தத் தொடரில் சோபிக்கத் தவறி வரும் ஸாக் கிராலி 22 ரன்களுக்கு மீண்டும் நிதிஷ் ரெட்டியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹாரி புரூக் அதிரடி காட்டி நெருக்கடியை இந்திய அணியின் பக்கம் திருப்பப் பார்த்தார். இவர் கிரீஸைவிட்டு இறங்கி வந்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக கீப்பர் துருவ் ஜுரெல் ஸ்டம்புகளுக்கு அருகே வந்து நின்றார். இதனால், ஸ்கூப் ஷாட்களை விளையாடி பவுண்டரிகள் எடுத்தார் புரூக். இதற்கும் ஃபீல்டிங் செட் செய்ததால், ஆகாஷ் தீப் பந்தில் ஸ்வீப் ஷாட் விளையாடப் பார்த்து போல்டானார் புரூக் (23). உணவு இடைவேளையில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நம்பிக்கையுடன் இந்திய அணி சென்றது.

உணவு இடைவேளைக்குப் பிந்தைய ஆட்டத்தில் அனுபவமிக்க ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக விளையாடி கூட்டணி அமைத்தார்கள். இந்தக் கூட்டணி 128 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் எடுத்தது.

வாஷிங்டன் சுந்தரிடம் பந்தைக் கொடுத்தார் ஷுப்மன் கில். ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றிக் காட்டினார் வாஷிங்டன் சுந்தர். முதலில் ஜோ ரூட்டை (40) போல்ட் செய்தார். நல்ல ஃபார்மில் உள்ள ஜேமி ஸ்மித்தை (8) அடுத்து போல்ட் செய்தார். தேநீர் இடைவேளைக்கு முன் இரு விக்கெட்டுகள் கிடைத்தது இந்தியாவுக்கு உத்வேகம் அளித்தது.

உணவு இடைவேளை முடிந்தபிறகு, பென் ஸ்டோக்ஸையும் (33) வாஷிங்டன் சுந்தர் போல்ட் செய்து கலக்கினார். பிரைடன் கார்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸை தலைவலி கொடுக்காதவாறு பார்த்துக்கொண்டு பும்ரா இருவரையும் போல்ட் செய்தார். பஷீர் விக்கெட்டையும் கடைசியில் வாஷிங்டன் சுந்தரே போல்ட் செய்தார். 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. கடைசி 6 விக்கெட்டுகளை 38 ரன்களுக்குள் இழந்தது. 12.1 ஓவர்கள் மட்டுமே வீசிய வாஷிங்டன் சுந்தர் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. ஓரளவுக்கு குறைவான ரன்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆர்ச்சர் ஓவரில் ஆஃப் ஸ்டம்ப் வெளியே வந்த ஷார்ட் ஆஃப் லெங்த் பந்தை லெக் சைடில் மடக்கி ஆடப் பார்த்து டக் அவுட் ஆனார் யஷஸ்வி ஜெயிஸ்வால். என்ன மனநிலையில் இப்படியொரு ஷாட்டை ஜெயிஸ்வால் விளையாடினார் என்பது அனைவருக்கும் வியப்பு தான்.

கேஎல் ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கிறிஸ் வோக்ஸ் தவறவிட்டது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. கருண் நாயர் சற்று தாக்குப்பிடித்தாலும் 14 ரன்களுக்கு பிரைடன் கார்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி அரைமணி நேரம் கார்ஸ் அட்டகாசமாக பந்துவீசினார். விளைவு கேப்டன் ஷுப்மன் கில்லும் 6 ரன்களுக்கு வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார்.

நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறக்கப்பட்டார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து செய்ததை, இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா செய்தது. நேற்று இந்தியா செய்ததை, இன்று இங்கிலாந்து செய்தது. இருந்தாலும், கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆகாஷ் தீப் 1 ரன்னுக்கு போல்டானார். இந்த விக்கெட்டுடன் நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேஎல் ராகுல் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவை. இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை. ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு உதவியும் இருக்கிறது. எனவே, டெஸ்ட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மிரட்டலான கடைசி நாள் ஆட்டம் அனைவருக்கும் காத்திருக்கிறது.

KL Rahul | Jasprit Bumrah | Washington Sundar | Ben Stokes | Brydon Carse | Ind v Eng | India vs England | Ind vs Eng | India v England | India tour of England | India England Test Series

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in