பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமானே காலிஃப், இணையத்தில் தனக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே காலிஃப் தங்கம் வென்றார். இந்தத் தங்கம் இமானே காலிஃப்புக்கு எளிதாகக் கிடைக்கவில்லை.
பதக்கத்துக்கான தன்னுடைய உழைப்பைத் தாண்டி, உளவியல் ரீதியாக சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது. காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலோ கரினியை எதிர்கொண்டார் இமானே காலிஃப்.
இந்த ஆட்டம் 46 நொடிகள் மட்டுமே நீடித்த நிலையில், காலிஃபின் முரட்டுத்தனமான குத்துக்குப் பிறகு இத்தாலிய வீராங்கனை ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இவரது மூக்கிலிருந்து ரத்தம் கசிந்தது.
இந்த ஆட்டத்தில் காலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு, இமானே காலிஃப் ஆணா பெண்ணா என சர்ச்சைக் கிளப்பப்பட்டது. இதுதொடர்பாக இணையத்தில் பல்வேறு கருத்துகள் பதியப்பட்டன. கடவுச் சீட்டில் ஒருவருக்கு என்ன பாலினம் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில்தான் வீரர்களின் பாலினம் அடையாளம் காணப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கமளித்தது.
இவற்றைக் கடந்து இறுதிச் சுற்று வரை முன்னேறிய இமானே காலிஃப், சீனாவின் யெங் லியூவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தங்கம் வென்ற பிறகும் தனது போராட்டத்தைத் தொடர்ந்துள்ள இமானே காலிஃப், இணையத்தில் தனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரிஸில் புகாரளித்துள்ளார். நீதிக்காகவும், மரியாதைக்காகவும் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளதாக இமானே காலிஃப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இமானே காலிஃபுக்கு எதிரான இனவாத, பாலியல் சர்ச்சை பிரசாரத்தைத் தொடங்கியவருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியுள்ளதாக இமானே காலிஃப் வழக்கறிஞர் நபில் பௌடி தெரிவித்துள்ளார்.