
ஐபிஎல் போட்டியில் விளையாட மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 42 வயது ஜேம்ஸ் ஆண்டர்சன், ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். அடிப்படை விலையாக ரூ. 1.25 கோடி நிர்ணயித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஆண்டர்சன் விருப்பம் காண்பிப்பது இதுவே முதன்முறை. ஐபிஎல் ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
இதுபற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
"எனக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும். ஏலத்தில் தேர்வாகிறேனா இல்லையா என்பது விஷயமல்ல. நான் மீண்டும் விளையாட வேண்டும் என்பதுதான் ஏலத்தில் பங்கெடுப்பதற்கான காரணம். இன்னும் என்னால் விளையாட முடியும் என்கிற உணர்வு எனக்குள் நிச்சயமாக இருக்கிறது. நன்றாகப் பந்துவீசி வருகிறேன். நல்ல உடற்தகுதியில் உள்ளேன். மீண்டும் விளையாட வேண்டும் என மிகுந்த ஆர்வத்தில் உள்ளேன். எங்காவது விளையாட வாய்ப்பு கிடைத்தால் அதை விரும்பி ஏற்பேன். இதுவரை எந்த அணியும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. பொறுத்திருந்து என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்" என்றார் ஆண்டர்சன்.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது பற்றியும் ஆண்டர்சன் பகிர்ந்திருந்தார்.
"தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது என்னுடையக் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், 50 வயது வரை விளையாடியிருப்பேன். நான் சிறப்பாகப் பந்துவீசுவதாகவும், நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாகவும் நான் நம்புகிறேன். இங்கிலாந்து அணி எதிர்காலத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அது சரிதான்" என்றார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ஆண்டர்சன் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராகச் செயல்பட்டார். 2003 முதல் இங்கிலாந்துக்காக விளையாடத் தொடங்கிய ஆண்டர்சன் 991 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708) ஆகியோருக்கு அடுத்தபடியாக 704 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.