
ரஞ்சி கோப்பையில் விளையாட முடியும்போது, ஒருநாள் கிரிக்கெட்டிலும் என்னால் விளையாட முடியும் என இந்திய வேகப்பந்துவீச்சாளர் முஹமது ஷமி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இடம்பெறாத நிலையில், முஹமது ஷமி இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முஹமது ஷமி கடைசியாக சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடினார். இதன்பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்குப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆசியக் கோப்பை டி20யில் விளையாடியது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யும் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இவை எதிலும் ஷமி இடம்பெறவில்லை.
முஹமது ஷமிக்கு முழங்காலில் பிரச்னை இருந்தது. இதன் காரணமாக 2024-ல் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அறுவைச் சிகிச்சை முடிந்தபோதிலும், கிரிக்கெட் விளையாடும் அளவுக்குப் பழைய நிலைக்குத் திரும்ப வழக்கத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது.
2023-க்கு பிறகு டெஸ்டில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி முழு உடற்தகுதியை நிரூபித்த பிறகே, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார். காயத்திலிருந்து குணமடைந்த பிறகு, இந்தியாவுக்காக மொத்தம் 9 ஆட்டங்களில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி இடம்பெறாமல் இருப்பது பற்றி தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், "கடந்த 2-3 வருடங்களில் ஷமி நிறைய முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவில்லை. விளையாட்டு வீரராக அவர் என்ன செய்வார் என்பது தெரியும். ஆனால், அவர் சில ஆட்டங்களில் விளையாட வேண்டும்" என்று அகர்கர் கூறியிருந்தார்.
"அணியில் தேர்வு செய்யப்படுவது என் கையில் இல்லை. உடற்தகுதியில் பிரச்னை இருந்தால், பெங்காலுக்காக விளையாட இங்கு நான் வந்திருக்கவே மாட்டேன். இதுபற்றி பேசி சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை. என்னால் நான்கு நாள் ஆட்டங்களில் (ரஞ்சி கோப்பை) விளையாட முடியும்போது, ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாட முடியும்.
உடற்தகுதி குறித்த தகவலைத் தெரிவிப்பது என் பொறுப்பல்ல. தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு செல்ல வேண்டும், விளையாட்டுக்குத் தயாராக வேண்டும் மற்றும் விளையாட வேண்டும். இது மட்டும் தான் என் பணி. தகவல் தெரிவிப்பதும் தெரிவிக்காததும் அவர்களுடைய வேலை. அது என்னுடைய பொறுப்பல்ல.
தொடர்ந்து போராட வேண்டும், கிரிக்கெட் விளையாட வேண்டும். நன்றாகச் செயல்பட்டால், அது உங்களுக்குப் பலனைத் தரும். அணியில் தேர்வு செய்யப்படுவது என் கையில் இல்லை. என்னால் போட்டிக்குத் தயாராக முடியும், கிரிக்கெட் விளையாட முடியும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நீங்கள் என்னைத் தேர்வு செய்யாவிட்டால், நான் இங்கு வந்து பெங்கால் அணிக்காக விளையாடுவேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
எனக்கும் வலியுடன் விளையாடுவதிலும் அணி பாதிக்கப்படுவதிலும் விருப்பமில்லை. அறுவைச் சிகிச்சை செய்த பிறகு அணிக்குத் திரும்ப வேண்டும் என நினைத்தேன். அதைச் செய்யவே முயற்சிக்கிறேன். எப்போது அழைத்தாலும் நான் விளையாடத் தயாராகவே இருக்கிறேன்" என்றார் முஹமது ஷமி.
Mohammed Shami | Ajit Agarkar | BCCI | BCCI Selection Committee |