டிஎன்பிஎல்: திண்டுக்கலை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர்!

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் டிஎன்பிஎல் கோப்பையை வெல்வது இதுவே முதன்முறை.
டிஎன்பிஎல்: திண்டுக்கலை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர்!
படம்: https://x.com/TNPremierLeague
2 min read

டிஎன்பிஎல் 2025 இறுதிச் சுற்றில் அஸ்வினின் திண்டுக்கலை வீழ்த்திய சாய் கிஷோரின் திருப்பூர் முதன்முறையாகக் கோப்பையை வென்றது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2025 (டிஎன்பிஎல்) கடந்த ஜூன் 5 அன்று தொடங்கியது. லீக் சுற்று முடிவில் 7 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் முதலிடத்தைப் பிடித்தது. ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 5 வெற்றிகளையும் திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றிகளையும் திருச்சி கிராண்ட் சோழாஸ் 3 வெற்றிகளையும் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தன.

குவாலிஃபையர் 1-ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் மோதின. இதில் சாய் கிஷோரின் திருப்பூர் தமிழன்ஸ் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. டிஎன்பிஎல் 2025-ல் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் சந்தித்த முதல் தோல்வி இது.

எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் மோதின. இதில் திண்டுக்கல் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

கடந்த 4 அன்று நடைபெற்ற குவாலிஃபையர் 2-வில் பாபா அபரஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லிஸ், ஆர் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் மோதின. இதில் திண்டுக்கல் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. லீக் சுற்றில் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காத சேப்பாக் சூப்பர் கில்லிஸ் பிளே ஆஃப் சுற்றில் அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது.

திண்டுக்கலில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் சாய் கிஷோரின் திருப்பூரும் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய அஸ்வினின் திண்டுக்கலும் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த திருப்பூரில் தொடக்க பேட்டர்கள் அமித் சாத்விக் 34 பந்துகளில் 65 ரன்களும் துஷார் ரஹேஜா 46 பந்துகளில் 77 ரன்களும் எடுத்தார்கள். பின்வரிசையில் பேட்டர்கள் ஓரளவுக்கு கைக்கொடுத்ததால் திருப்பூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் அஸ்வின் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி 39 ரன்கள் கொடுத்தார்.

221 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கலுக்கு அஸ்வின் வழக்கம்போல் நல்ல தொடக்கம் தரவில்லை. பாபா இந்திரஜித், விமல் குமார் போன்ற பேட்டர்களும் ஏமாற்றமளித்தார்கள். எந்தவோர் பேட்டரும் 25 ரன்களை தொடவில்லை. விளைவு 14.4 ஓவர்களில் 102 ரன்களுக்கு சுருண்டது திண்டுக்கல். இதன்மூலம், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிஎன்பிஎல் 2025 கோப்பையை வென்றது.

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் டிஎன்பிஎல் கோப்பையை வெல்வது இதுவே முதன்முறை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in