
அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தைத் தடை செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
ஐசிசியின் வாரியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காணொளி வாயிலாகக் கூடியது. இந்தக் கூட்டத்தில் தான் அமெரிக்க கிரிக்கெட் வாரியத்துக்குத் தடை விதிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
ஐசிசியின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் கடந்த ஜூலையில் நடைபெற்றது. அமெரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த இந்தப் பொதுக்கூட்டத்தில் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் எந்த முன்னேற்றமும் காணப்படாமல் இருந்தால், ஐசிசி உரிய நடவடிக்கையை எடுக்கும் என்றும் எச்சரித்திருந்தது.
இதைத் தொடர்ந்து தான், அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி உறுப்பினர் அந்தஸ்திலிருந்து தடை செய்வதாகவும் தடையானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஐசிசி செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது.
அதேசமயம், அமெரிக்க கிரிக்கெட் வாரியத்துக்குத் தடை விதித்துள்ளதன் மூலம், அமெரிக்க அணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் ஐசிசி உறுதியளித்துள்ளது. அமெரிக்க தேசிய அணியின் நிர்வாகப் பொறுப்பை ஐசிசி தற்காலிகமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக ஐசிசி போட்டிகளில் அமெரிக்கா பங்கேற்பதில் எந்தச் சிக்கலும் இல்லை, 2028 ஒலிம்பிக்ஸில் பங்கேற்கவும் அந்த அணி தயாராகலாம் என்பதை ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.
"ஐசிசி விதிகளின் கீழ், ஐசிசி உறுப்பினராக அமெரிக்க கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப தனது கடமைகளை மீறி செயல்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஐசிசி வாரியக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
முறையான நிர்வாகக் கட்டமைப்பை செயல்படுத்தத் தவறியது, அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஆட்சிமன்றக் குழு அந்தஸ்தை அடைவதற்கான முயற்சிகளை எடுக்காதது, அமெரிக்கா மற்றும் உலகளவில் கிரிக்கெட்டின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களால் நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது" என்று ஐசிசியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICC | USAC | United States of America Cricket | USA Cricket Board |