
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய பேட்டர் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் ஆல்-ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் அடித்தது உள்ளிட்டவை ஓமர்ஸாயை இந்த இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. அவருடைய சக வீரர் முஹமது நபி இரண்டாவது இடத்துக்கு சரிந்துள்ளார். இந்தியாவின் அக்ஷர் படேல்17 இடங்கள் முன்னேற்றம் கண்டு 13-வது இடத்தை அடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி தரவரிசையில் நான்காவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். ஹெயின்ரிக் கிளாசென் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இரு இடங்கள் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார். இதேபோல ஷ்ரேயஸ் ஐயரும் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 8-வது இடத்தை அடைந்துள்ளார். ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
பந்துவீச்சில் முஹமது ஷமி மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டு 11-வது இடத்தை அடைந்துள்ளார். குல்தீப் யாதவ் 3 இடங்கள் பின்தங்கி 6-வது இடத்தை அடைந்துள்ளார்.