
2023 ஒருநாள் உலகக் கோப்பை மூலம் இந்தியாவுக்கு ரூ. 11637 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
2023 ஒருநாள் உலகக் கோப்பை அக். 5 அன்று தொடங்கி நவம்பர் 19 வரை அஹமதாபாத், சென்னை, தில்லி, மும்பை உட்பட 10 இடங்களில் நடைபெற்றது. ஆரம்பம் முதல் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை மூலம் 1.39 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 11,637 கோடி) வருமானம் கிடைத்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இதில், ஆட்டங்கள் நடைபெறும் நகரங்களில் தங்குமிடம், பயணம், போக்குவரத்து, உணவு மற்றும் பானங்கள் மூலம் 861.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 12.5 லட்சம் ரசிகர்கள் இந்த உலகக் கோப்பையை நேரில் பார்த்ததாகவும், அதில் 75 சதவீதம் பேர் முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தை பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உலகக் கோப்பையின் போது சுமார் 48,000 முழு மற்றும் பகுதி நேர வேலைகள் உருவாக்கப்பட்டதாகவும் ஐசிசி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிக வருவாய் ஈட்டிய உலகக் கோப்பை என்கிற பெருமை 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு கிடைத்துள்ளது.