டி20 உலகக் கோப்பை கனவு அணி
டி20 உலகக் கோப்பை கனவு அணிANI

டி20 உலகக் கோப்பை: ஐசிசி கனவு அணியில் 6 இந்திய வீரர்கள்

கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2024 டி20 உலகக் கோப்பைக்கான கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைக்கான கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த உலகக் கோப்பையில் அவர் 257 ரன்கள் குவித்தார். இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த குர்பாஸ் (281 ரன்கள்) மற்றொரு தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மே.இ. தீவுகள் அணியை சேர்ந்த பூரன் (228 ரன்கள்), ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஸ்டாய்னிஸ் (179 ரன்கள், 10 விக்கெட்டுகள்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த உலகக் கோப்பையில் 199 ரன்கள் எடுத்து, இறுதிச் சுற்றில் ஆட்டத்தையே மாற்றிய ஒரு கேட்சையும் பிடித்த சூர்யகுமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆல் ரவுண்டர்களில் இந்திய வீரர்களான ஹார்திக் பாண்டியா(144 ரன்கள், 11 விக்கெட்டுகள்) மற்றும் அக்‌ஷர் படேல் (இறுதிச் சுற்றில் 47 ரன்களும், ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்டுகளும்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணியை முதல்முறையாக அரையிறுதி வரை அழைத்து வந்த அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் மற்றும் இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபரூக்கி (17 விக்கெட்டுகள்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் தூண்களாக இருந்த பும்ரா (15 விக்கெட்டுகள்) மற்றும் அர்ஷ்தீப் சிங் (17 விக்கெட்டுகள்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் இருந்து 6 வீரர்கள், ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து 3 வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, மே.இ. தீவுகள் அணியில் இருந்து தலா ஒரு வீரரும் தேர்வாகி உள்ளனர். 15 விக்கெட்டுகளை வீழ்த்திய தெ.ஆ. வீரர் நார்க்கியா 12-வது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பையின் கனவு அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), குர்பாஸ் ( விக்கெட் கீப்பர்), பூரன், சூர்யகுமார் யாதவ், ஸ்டாய்னிஸ், ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ரஷித் கான், பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஃபரூக்கி, நார்க்கியா (12-வது வீரர்).

logo
Kizhakku News
kizhakkunews.in