புதிய விதிகளுக்கு ஐசிசி ஒப்புதல்!

புதிய விதிகள் ஜூன் 17 முதல் டெஸ்டிலும், ஜூலை 2 முதல் ஒருநாள் கிரிக்கெட்டிலும், ஜூலை 10 முதல் டி20யிலும் நடைமுறைக்கு வரவுள்ளன.
புதிய விதிகளுக்கு ஐசிசி ஒப்புதல்!
ANI
1 min read

ஒருநாள் கிரிக்கெட்டில் இரு புதிய பந்துகளைப் பயன்படுத்துவதில் புதிய மாற்றம் மற்றும் கன்கஷன் சப் தொடர்புடைய புதிய விதிகளுக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய பந்துக்கான விதி

ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இரு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இரு பந்துகளும் இரு முனையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள விதி மூலம், இன்னிங்ஸ் தொடங்கியதிலிருந்து 34-வது ஓவர் வரை மட்டுமே இரு புதிய பந்துகளையும் பயன்படுத்த முடியும். 34-வது ஓவருக்கு பிறகு, இரு பந்துகளில் ஏதேனும் ஒரு பந்தை பந்துவீசும் அணி தேர்வு செய்துகொள்ளலாம்.

மீதமுள்ள 16 ஓவர்களுக்கும் அந்தப் பந்தை மட்டுமே இரு முனைகளிலிருந்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். பேட்டுக்கும் பந்துக்கும் இடையிலான சமநிலையை உருவாக்குவதற்கான இந்த விதியை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது.

ஒருவேளை ஆட்டம் இரு அணிக்களுக்கும் தலா 25 ஓவர்களாக குறைக்கப்பட்டால் அல்லது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் துவங்கும் முன் ஆட்டம் தலா 25 ஓவர்கள் ஆட்டமாகக் குறைக்கப்பட்டால், பந்துவீசும் அணி ஒரு பந்தை மட்டுமே இன்னிங்ஸ் முழுக்க பயன்படுத்த முடியும்.

கன்கஷன் சப்

புதிய கன்கஷன் சப் விதிப்படி, இரு அணிகளும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு கன்கஷன் சப் வீரர்கள் பட்டியலை ஆட்ட நடுவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்-ரவுண்டர் ஆகியோரைக் கொண்ட பட்டியலாக இது இருக்க வேண்டும் என்பது புதிய விதி.

இந்தப் பட்டியலில் உள்ள வீரர்களும் கன்கஷன் சப் முறையில் மாற வேண்டிய தேவை உருவானால், இந்தப் பட்டியலில் இல்லாத வீரர் ஒருவரை ஆட்ட நடுவர் கன்கஷன் சப் மாற்று வீரராகப் பரிந்துரைப்பார்.

கடந்த ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 4-வது டி20யில் இந்திய அணி பேட்டிங் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவுக்குப் பதில் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்ஷித் ராணாவைப் பயன்படுத்தியது. ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த கன்கஷன் சப் மாற்றத்துக்கு ஆட்ட நடுவர் ஒப்புக்கொண்டது சர்ச்சையாக பெரும் விவாதமானது.

ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டி பரிந்துரைத்த புதிய விதிகள் அனைத்தும் ஜூன் 17 முதல் டெஸ்டிலும், ஜூலை 2 முதல் ஒருநாள் கிரிக்கெட்டிலும், ஜூலை 10 முதல் டி20யிலும் நடைமுறைக்கு வரவுள்ளன.

இதேபோல பவுண்டரி எல்லை அருகே கேட்ச் பிடிக்கும் விதிகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு ஃபீல்டர் பந்தைப் பிடிக்கும்போது பவுண்டரி எல்லைக்கு வெளியே ஒரு முறை மட்டுமே கால் பதிக்க அனுமதிக்கப்படுவார். இல்லையெனில், அது சிக்ஸராகவே கருதப்படும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in