
மெல்போர்ன்ஸ் டெஸ்டில் அறிமுக இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ், விராட் கோலி இடையிலான உரசல் மற்றும் வாக்குவாதம் பேசுபொருளாகியுள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் அறிமுக வீரராக சாம் கோன்ஸ்டஸ் களமிறங்குவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
19 வயதில் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்டில் விளையாடும் நான்காவது இளம் வீரர் என்ற பெருமையுடன் கோன்ஸ்டஸ் களமிறங்கினார். முதல் ஓவரை வீச புத்தம் புதிய பந்துடன் பும்ரா காத்திருந்தார்.
முதல் ஓவரில் பும்ரா அற்புதமாகப் பந்துவீச, கோன்ஸ்டஸ் தடுமாறினார். பந்து பேட்டுக்கு மிகவும் நெருக்கமாச் சென்றது.
பும்ரா வீசிய இரண்டாவது ஓவரிலேயே கோன்ஸ்டஸ் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட்டுக்கு முயற்சித்தார். பந்து பேட்டில் சிக்கவில்லை. ஒட்டுமொத்த மெல்போர்ன் மைதானமும் கோன்ஸ்டஸ் ஷாட் தேர்வைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.
பும்ராவின் மூன்றாவது ஓவரில் மீண்டும் ரிவர்ஸ் ஷாட்டுக்கு முயற்சித்தார். இந்த முறையும் பந்து பேட்டில் சிக்கவில்லை. இளம் கன்று பயமறியாது என்பதற்கேற்ப, பும்ராவை நெருக்கடி இல்லாமல் கையாண்டார்.
முதல் 6 ஓவர்களில் ஆஸ்திரேலியா 12 ரன்கள் எடுத்திருந்தது. கோன்ஸ்டஸ் 21 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தார்.
முதல் மூன்று ஓவர்களில் இரு மெய்டன் உள்பட 2 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த பும்ரா, தொடர்ச்சியாக நான்காவது ஓவரை வீசினார்.
முதல் பந்து ஸ்கூப் ஷாட் மூலம் பவுண்டரி. அடுத்து ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் மூலம் ஸ்லிப் ஃபீல்டர்கள் தலைக்கு மேல் சிக்ஸர். 2021 ஜனவரிக்குப் பிறகு டெஸ்டில் பும்ரா ஓவரில் அடிக்கப்பட்ட முதல் சிக்ஸர் இது.
இதே ஓவரின் 5-வது பந்தில் மீண்டும் ஸ்கூப் ஷாட் விளையாடி பவுண்டரி எடுத்தார் கோன்ஸ்டஸ்.
ஆட்டத்தின் போக்கை அதிரடியாக மாற்றி, இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் சாம் கோன்ஸ்டஸ்.
10 ஓவர்களில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்தது.
முஹமது சிராஜ் வீசிய 10-வது ஓவர் நிறைவடைந்தவுடன் கோன்ஸ்டஸை கடந்து சென்றுகொண்டிருந்தார் விராட் கோலி.
அப்போது இருவருடைய தோள்பட்டையும் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டது. உடனடியாக, கோலி திரும்பிப் பார்க்க கோன்ஸ்டஸ் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக உஸ்மான் கவாஜா இருவருக்கு இடையே வந்து சமாதானப்படுத்த முயற்சித்தார். கள நடுவர் மைக்கேல் கௌவும் சமாதானப்படுத்தினார்.
19 வயது இளம் வீரர் அறிமுக ஆட்டத்திலேயே இந்தத் தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவை நெருக்கடிக்குள்ளாக்கியதும் ஆஸ்திரேலியர்களையே கதறவிட்ட விராட் கோலியிடம் எந்த அச்சமும் இல்லாமல் துணிச்சலுடன் எதிர்த்து நின்றதும் சாம் கோன்ஸ்டஸ் யார் என்பதை கிரிக்கெட் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது.
கோலியுடனான சண்டை, கோன்ஸ்டஸை மேலும் உத்வேகப்படுத்தியுள்ளது. பும்ரா உடனடியாக வீசிய 11-வது ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 18 ரன்களை விளாசினார் கோன்ஸ்டஸ்.
கோலியுடனான உரசல் குறித்து கோன்ஸ்டஸ்:
"இருவரையும் உணர்வுகள் ஆட்கொண்டுவிட்டது. கோலி வருவதை நான் உணரவில்லை. என்னுடையக் கையுறையை சரிசெய்து கொண்டிருந்தேன். இதன்பிறகு, இருவருடையத் தோள்பட்டைகளும் மோதிக்கொண்டன. கிரிக்கெட்டில் இது நிகழும்" என்றார் கோன்ஸ்டஸ்.
வேகப்பந்துவீச்சாளர்களைத் தாக்குதல் ஆட்டத்தினால் கையாண்ட கோன்ஸ்டஸ், ஜடேஜா வந்தவுடன் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முறையற்ற வகையில் இரு வீரர்கள் உடலைக் கொண்டு மோதிக்கொள்வது ஐசிசி விதிப்படி குற்றம். இதன் அடிப்படையில், கோல் vs கோன்ஸ்டஸ் சம்பவம் குறித்து நடுவர்கள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.