பிரபல செஸ் வீராங்கனை சூசன் போல்கர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹங்கேரியைச் சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை சூசன் போல்கர். 1996 முதல் 1999 வரை மகளிர் செஸ் உலக சாம்பியனாகத் திகழ்ந்தார். 15 வயதில் உலகின் நெ.1 செஸ் வீராங்கனையாகி சாதனை படைத்தார். பெண்களில் 3-வது செஸ் கிராண்ட்மாஸ்டர், செஸ் ஒலிம்பியாடில் 11 பதக்கங்கள் என இவர் நிகழ்த்திய சாதனைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். குகேஷ், பிரக்ஞானந்தா போன்ற இந்திய இளம் செஸ் வீரர்களைப் பற்றி எப்போதும் பெருமை பொங்கப் பாராட்டுவார். தற்போது செஸ் பயிற்சியாளராகவும் பிரபல நிபுணராகவும் உள்ளார்.
இந்நிலையில் இன்று இவர் வெளியிட்ட ஒரு தகவல் செஸ் உலகை அதிர வைத்துள்ளது. தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக சூசன் போல்கர் கூறியுள்ளார்.
சர்வதேசப் புற்றுநோய் தினமான இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
"எனக்குப் புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. அதிர்ஷ்டவசமாக தொடக்க நிலையிலேயே புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அற்புதமான மருத்துவக் குழுவினரின் உதவியால் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. புற்றுநோய் இருப்பதை தொடக்க நிலையிலேயே கண்டறிவது வெற்றிகரமான சிகிச்சைக்கு அவசியமானது. நான், மருத்துவப் பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளேன்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை அனைவரும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆரோக்கியமான எடையில் இருந்து, நன்கு உணவு உட்கொண்டு, தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் முக்கியம். வாழ்க்கை மிகவும் சிறியது. ஒவ்வொரு தருணமும் முக்கியமானது. வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். உங்கள் குடும்பத்தை நேசியுங்கள், அன்பாக இருங்கள்" என்று சூசன் போல்கர் கூறியுள்ளார்.