இன்னொரு ஐபிஎல்?: தோனி பதில்

"தங்களுடைய செயல்பாட்டின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற முடிவெடுத்தால், சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற நேரிடும்."
இன்னொரு ஐபிஎல்?: தோனி பதில்
ANI
1 min read

ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதா இல்லையா என்பது பற்றி முடிவெடுக்க இன்னும் 4-5 மாதங்கள் இருப்பதாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025-ல் தனது கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று குஜராத் டைடன்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. ஐபிஎல் 2025-ல் இதுவே சிஎஸ்கேவின் அதிகபட்ச ஸ்கோர். பந்துவீச்சிலும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட குஜராத் அணி 147 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், 83 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியுடன் ஐபிஎல் 2025-ஐ நிறைவு செய்தது சிஎஸ்கே.

ஆட்டம் நிறைவடைந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தார்கள். காரணம், எம்எஸ் தோனி அடுத்தாண்டு வருவாரா இல்லையா என்பதை அவர் மூலம் தெரிந்துகொள்வதற்காகக் காத்திருந்தார்கள். பரிசளிப்பு விழாவில் ஹர்ஷா போக்ளே ஓய்வு பற்றி தோனியிடம் கேட்டார்.

எம்எஸ் தோனி கூறுகையில்,

"ஓய்வு குறித்து முடிவெடுக்க 4-5 மாதங்கள் உள்ளன. என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முடிவை எடுக்க எந்த அவசரமும் கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் உடற்தகுதியைத் தக்கவைக்க கூடுதல் உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கிறது. இது உயர்நிலை கிரிக்கெட் என்பதை மறந்துவிடக் கூடாது. இது தொழில்முறை கிரிக்கெட். என்னுடைய சிறந்த நிலையில் நான் இருக்க வேண்டும். உங்களுடைய செயல்பாட்டை வைத்து மட்டுமே எப்போதும் முடிவெடுக்க முடியாது. தங்களுடைய செயல்பாட்டின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற முடிவெடுத்தால், சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற நேரிடும். உங்களுக்கு எந்தளவுக்கு விளையாட வேண்டும் என்பதற்கான பசி இருக்கிறது, எந்தளவுக்கு உடற்தகுதியோடு இருக்கிறீர்கள், உங்களால் எந்தளவுக்கு பங்களிப்பைச் செலுத்த முடியும், அணிக்கு நீங்கள் தேவையா இல்லையா என்பது தான் முக்கியம். எனக்கு முடிவெடுக்க போதுமான நேரம் உள்ளது. ராஞ்சிக்குச் சென்று நாளாகிவிட்டது. ராஞ்சிக்குச் செல்ல வேண்டும். பைக்கில் சில பயணங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. எனவே, சில மாதங்களுக்குப் பிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம்" என்றார் தோனி.

ஹர்ஷா போக்ளே மீண்டும் இதுபற்றி கேள்வியெழுப்பும் வகையில், "ஓய்வு பெறுவதாக நீங்கள் சொல்லவில்லை" என்றார்.

"நான் ஓய்வு பெறுவதாகச் சொல்லவில்லை. அதேசமயம், திரும்ப வருவதாகவும் சொல்லவில்லை. முடிவெடுக்க எனக்கு நேரம் இருக்கிறது. நேரம் இருப்பதால், யோசித்து முடிவெடுக்கலாம்" என்றார் எம்எஸ் தோனி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in