நான் ஓய்வு பெறவில்லை: ரோஹித் சர்மா

"நான் எதிர்காலம் குறித்து நிறைய சிந்திப்பதில்லை. தற்போதைய நிலையில் அணிக்கு என்ன தேவை? என்று பார்ப்பேன். அதைத் தான் சிந்திக்கிறேன்."
நான் ஓய்வு பெறவில்லை: ரோஹித் சர்மா
2 min read

எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை மைக், பேனா, லேப்டாப் வைத்துள்ளவர்கள் முடிவு செய்ய முடியாது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

பிஜிடி தொடரில் முதல் நான்கு டெஸ்டுகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, அணியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகின. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்க, இந்திய அணி சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலை உள்ளது.

கேப்டன் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மில் இருப்பது அவருக்கான அழுத்தத்தைக் கூட்டியது. கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 13.3. இந்த நிலையில்தான் சிட்னி டெஸ்டிலிருந்து விலகிக் கொள்ள ரோஹித் சர்மா முடிவெடுத்ததாகத் தகவல்கள் வெளியாகின.

சிட்னி டெஸ்டுக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பிலும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்குப் பதில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பங்கெடுத்தார். அவரும் சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடுவதை உறுதி செய்யவில்லை. இதையடுத்து, சிட்னி டெஸ்டில் டாஸின்போது ரோஹித் சர்மாவுக்குப் பதில் பும்ரா வந்தார். இதன்மூலம், அவர் சிட்னி டெஸ்டிலிருந்து விலகிக் கொண்டது உறுதியானது.

சிட்னி டெஸ்டுக்கு பிறகு ரோஹித் சர்மா டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதற்கு ரோஹித் சர்மாவே விளக்கம் கொடுத்துள்ளார். சிட்னி டெஸ்ட் இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அவர் பேட்டியளித்தார்.

"சிட்னி டெஸ்டில் விளையாட வேண்டாம் என்று எடுக்கப்பட்ட முடிவு ஓய்வு முடிவல்ல. என்னுடைய பேட்டிலிருந்து ரன் வரவில்லை என்பதால், சிட்னி டெஸ்டிலிருந்து விலகிக் கொண்டேன்.

நான் பெர்த் வந்தடைந்தபோது, முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதற்கான காரணம் கண்முன் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்கள் கூட்டணி அமைக்கப்பட்டது, அதுதான் வெற்றியைத் தேடித் தந்தது. கேஎல் ராகுல் மற்றும் ஜெயிஸ்வால் சிறப்பாக விளையாடினார்கள். தோல்வியடைய முடியாது என்கிற நிலைக்கு அவர்கள்தான் அணியை அழைத்துச் சென்றார்கள்.

அடுத்த 5 மாதங்கள் அல்லு இரு மாதங்களுக்குப் பிறகும் என்னுடைய பேட்டிலிருந்து ரன் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கிரிக்கெட்டில் நான் நிறைய பார்த்துள்ளேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விநாடியும் வாழ்க்கை மாறும்.

நிலைமை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதேசமயம், நான் நிதர்சனத்தையும் உணர வேண்டும். மைக், பேனா மற்றும் லேப்டாப் வைத்துள்ளவர்கள் சொல்வதிலும் எழுதுவதிலும் வாழ்க்கை மாறிவிடப் போவதில்லை. நாம் எப்போது ஓய்வு பெற வேண்டும், எப்போது விலகிக் கொள்ள வேண்டும், எப்போது கேப்டன் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் முடிவு செய்ய முடியாது. நான் விவேகமுள்ள ஒரு மனிதன். முதிர்ச்சியடைந்தவன். இரு குழந்தைகளுக்குத் தந்தை. எனவே, வாழ்க்கையில் எனக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியும்.

இந்த டெஸ்டில் விளையாட வேண்டாம் என்ற முடிவை சிட்னி வந்த பிறகு முடிவு செய்தேன். இரு டெஸ்டுகளுக்கு இடையே இரு நாள்கள்தான் இருந்தன. புத்தாண்டன்று தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவரிடம் இதுகுறித்து பேச வேண்டாம் என்றிருந்தேன்.

எனினும், என்னால் முடிந்த முயற்சியை நான் செய்கிறேன், இருந்தாலும் ரன்கள் வரவில்லை என்பது என் மனதில் இருந்தது. அதை நான் ஏற்றுக்கொண்டு, பாதையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவருடனான என்னுடைய உரையாடல் மிக எளிதான ஒன்று. என்னுடைய பேட்டிலிருந்து ரன்கள் வரவில்லை. நான் ஃபார்மில் இல்லை. இது முக்கியமான டெஸ்ட். இந்த டெஸ்டுக்கு ஃபார்மிலுள்ள வீரர்கள் தேவை. வீரர்கள் சிறப்பான ஃபார்மில் இல்லை. ஃபார்மில் இல்லாத வீரர்களை சுமக்கக் கூடாது. என சாதாரண சிந்தனைதான் என் மனதில் இருந்தது.

என் மனதில் உள்ள எண்ணத்தைத் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவரிடம் கூற வேண்டும் என நினைத்தேன். அவர்களும் என் முடிவை ஆதரித்தார்கள். நிறைய ஆண்டுகளாக விளையாடி வருவதால், நீ என்ன செய்கிறாய் என்பதைத் தீர்மானிக்க நீ தான் சரியான நபர்.

இது எனக்கு மிகவும் கடினமான முடிவு. ஆனால் அனைத்தையும் மனதில் கொண்டு பார்த்தால், இது விவேகமான முடிவாக இருக்கலாம்.

நான் எதிர்காலம் குறித்து நிறைய சிந்திப்பதில்லை. தற்போதைய நிலையில் அணிக்கு என்ன தேவை? என்று பார்ப்பேன். அதைத் தான் சிந்திக்கிறேன். வேறு எதுவும் இல்லை" என்றார் ரோஹித் சர்மா.

இறுதியில் நான் எங்கும் செல்லவில்லை என்று கூறி கடந்து சென்றார் ரோஹித் சர்மா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in