
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி தன்னை மோசமாக நடத்தியதாக மேற்கிந்தியத் தீவுகள் டி20 ஜாம்பவான் கிறிஸ் கெயில் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் கிறிஸ் கெயில். ஐபிஎல் 2009 மற்றும் ஐபிஎல் 2009/10 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக விளையாடினார்.
ஐபிஎல் 2011 முதல் ஐபிஎல் 2017 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக விளையாடினார். ஆர்சிபிக்காக விளையாடியது தான் கெயிலின் உச்சம். 2011-ல் 608 ரன்கள், 2012-ல் 733 ரன்கள், 2013-ல் 708 ரன்கள் எனத் தொடர்ச்சியாக ஐபிஎல்-லில் கலக்கி வந்தார். புனே வாரியர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தது 2013-ல் ஆர்சிபிக்காக விளையாடியபோது தான்.
ஐபிஎல் 2018 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2021-க்குப் பிறகு, கெயில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை.
பஞ்சாப் அணி தன்னைச் சரியாக நடத்தவில்லை என்றும் மன உளைச்சலுக்கு ஆளானேன் என்றும் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஷுபாங்கர் மிஷ்ராவுக்கு அளித்த பாட்காஸ்டில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
"என் ஐபிஎல் வாழ்க்கை பஞ்சாப் அணியுடன் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. கிங்ஸ் லெவனில் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) நான் அவமதிக்கப்பட்டேன். ஐபிஎல் போட்டிக்கு நான் நிறைய பங்காற்றியுள்ளேன். மூத்த வீரராக நான் சரியாக நடத்தப்படவில்லை என நினைக்கிறேன். என்னைக் குழந்தையைப்போல நடத்தினார்கள். என் வாழ்க்கையில் முதல்முறையாக நான் மனஉளைச்சலுக்கு ஆளானதாக உணர்ந்தேன். அனில் கும்ப்ளேவிடம் (தலைமைப் பயிற்சியாளர்) பேசும்போது நான் உடைந்துவிட்டேன். உண்மையில் நான் காயப்பட்டேன்.
அணி நிர்வாகம் நடத்தப்பட்ட விதம் மற்றும் கும்ப்ளேவால் ஏமாற்றமடைந்துவிட்டேன் என்பதை அவரிடம் அழுதுகொண்டே கூறினேன். கேஎல் ராகுல் என்னை அழைத்து, "அடுத்த ஆட்டத்தில் நீ விளையாடுகிறாய், பொறுத்திரு" என்றார். நான் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, என் உடைமைகளை எடுத்து வெளியேறிவிட்டேன்" என்று நினைவுகூர்ந்தார் கிறிஸ் கெயில்.
2021 ஐபிஎல் போட்டியின்போது கொரோனா பெருந்தொற்று இருந்ததால், பாதுகாப்பு வளையங்களுக்குள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐபிஎல் போட்டி விளையாடப்பட்டது. "அப்போதைய நிலையில் பணம் ஒரு பொருட்டே இல்லை. மனநலம் தான் மிகவும் முக்கியமானதாக இருந்தது. என்னுள் நான் நொறுங்கிக்கிடப்பது போல உணர்ந்தேன், வெளியேற வேண்டும் என நினைத்தேன்" என்றார் கிறிஸ் கெயில்.
ஐபிஎல் போட்டியில் 142 ஆட்டங்களில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில், 39.72 சராசரியில் 148.96 சராசரியில் 4,965 ரன்கள் குவித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 41 ஆட்டங்களில் 40.75 சராசரியில் 1,304 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 10 அரை சதங்கள் அடக்கம்.
ஐபிஎல் 2025 இறுதிச் சுற்றில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை வென்றது. அப்போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முன்னாள் வீரராகவே கெயில் இந்த வெற்றியைக் கொண்டாடினார்.
Chris Gayle | IPL | Kings XI Punjab | Punjab Kings | KL Rahul | Anil Kumble |