டெஸ்ட் கேப்டன்: மனம் திறந்த ஷுப்மன் கில்!

"இதுமாதிரியான விஷயங்களை ரோஹித் சர்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டுள்ளேன்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
2 min read

இந்திய டெஸ்ட் கேப்டன் ஆன பிறகு ஷுப்மன் கில் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்தது. ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதால் புதிய டெஸ்ட் கேப்டன் யார் என்ற அறிவிப்பையும் வெளியிட வேண்டிய பொறுப்பு தேர்வுக் குழுவுக்கு இருந்தது. மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில்லை அறிவித்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு கில் தலைமையிலான அணியை அறிவித்தார்.

டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறித்து கில் மனம் திறந்து பேசியுள்ளார். இந்திய கிரிகெட் அணியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் கில் பேசிய காணொளி வெளியாகியுள்ளது.

"நிச்சயமாக மிகப் பெரிய உணர்வு. சிறு வயதில் யார் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினாலும், இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்தியாவுக்காக டெஸ்டில் நீண்ட காலத்துக்கு விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைப்பது என்பது பெரிய கௌரவம். மிகப் பெரிய பொறுப்பு.

முன்னுதாரணமாக இருந்து வழிநடத்துவதில் நம்பிக்கை கொண்டவன் நான். அது வெறும் செயல்பாடில் மட்டுமில்லாமல், களத்துக்கு வெளியே ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பிலும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயம் இருக்கும். எனவே, ஒரு வீரரிடமிருந்து அவருடைய சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வர என்ன தேவை என்பதை நல்ல தலைவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் கிரிக்கெட் சார்ந்து மட்டுமில்லாமல் ஒரு வீரர் பற்றி மிகவும் ஆழமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வீரர்களிடம் இதுதொடர்புடைய உரையாடல்களை நடத்துவது உற்சாகத்தை அளிக்கும். அவர்களிடத்திலிருந்து சிறப்பானப் பங்களிப்பைப் பெற எது தேவை என்பது அப்போது தான் தெரிந்துகொள்ள முடியும்.

மற்ற விஷயங்கள் குறித்து சிந்திக்கத் தொடங்கினால், அது எனக்குக் கூடுதல் அழுத்தத்தை தான் கொடுக்கும். அது தேவையில்லாதது. காரணம், பேட்டிங் செய்யும் நேரத்தில் சில ரிஸ்க் எடுத்தாக வேண்டும். விளையாடும்போது வெறும் பேட்டராக சில முடிவுகளை எடுக்க வேண்டும். அது தான் சுதந்திரத்தைக் கொடுக்கும். பேட்டிங் செய்யும்போது நான் கேப்டன் என்று சிந்திக்காமல் வெறும் பேட்டராக மட்டுமே முடிவினை எடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டுள்ளேன்.

விராட் கோலி எப்போதும் மிகவும் ஆக்ரோஷமானவராக இருப்பார். எப்போதும் பசி உணர்வுடனும் ஆர்வத்துடனும் முன்னணியில் இருந்து வழிநடத்த விரும்புவார். இதுவே ரோஹித் சர்மாவை எடுத்துக்கொண்டால், அவரும் மிகவும் ஆக்ரோஷமானவர் தான். ஆனால், இதை அவர் வெளிப்படுத்தி பார்க்க முடியாது. களத்தில் எப்போதும் அவர் தாக்குதல் மனநிலையில் இருப்பவர்.

ரோஹித் சர்மா எப்போதும் அமைதியாக தந்திரமாகச் செயல்படக்கூடியவர். வீரர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை மிகச் சரியாகக் கடத்திவிடுவார். இதுமாதிரியான விஷயங்களை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டுள்ளேன்.

5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடும்போது நீண்ட நெடிய தொடர். மனதளவிலும் உடல் ரீதியாகவும் சவால் அளிக்கக் கூடியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் உற்சாகம் தரக்கூடியதே இந்த அம்சங்கள் தான். சவால் அளிக்க வெவ்வேறு விஷயங்கள் உள்ளன. வெறும் ஒற்றை பரிணாமத்தில் இருக்காது" என்றார் ஷுப்மன் கில்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in