இந்தியாவில் உள்ள சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் நானும் ஒருவன் என்று சாய் கிஷோர் பேட்டியளித்துள்ளார்.
புச்சி பாபு கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று தொடங்கியது. செப்டம்பர் 11 வரை நடைபெறும் இப்போட்டியில் டிஎன்சிஏ லெவன் அணிக்காக விளையாடுகிறார் சாய் கிஷோர்.
முன்னதாக சாய் கிஷோர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
“இந்தியாவில் உள்ள சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கிறேன்.
எனக்கு டெஸ்டில் வாய்ப்பு கொடுங்கள், நான் விளையாட தயாராக இருக்கிறேன்.
ஜடேஜாவுடன் நான் சிஎஸ்கே அணியில் இருந்திருக்கிறேன், ஆனால், அவருடன் இணைந்து சிவப்பு பந்து வடிவத்தில் விளையாடியதில்லை.
எனவே, ஜடேஜா போன்ற ஒரு வீரருடன் விளையாடுவது நல்ல அனுபவமாக இருக்கும், அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்வேன்.
நான் முன்பை விட நம்பிக்கையாகவும் தயாராகவும் இருக்கிறேன்” என்றார்.
2023 ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சாய் கிஷோர் 3 டி20 ஆட்டங்களில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்துடன் செப்டம்பரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் சாய் கிஷோரின் இந்த கருத்து மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.