
வினோத் காம்ப்ளியின் மூளைச் செயல்பாடுகள் நிலையானதாக இல்லை என அவருக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கருக்கு நெருங்கிய நண்பர். 52 வயது வினோத் காம்ப்ளி உடல்நலிவுற்ற நிலையில் இருக்கும் காணொளி அண்மையில் கவனம் பெற்றது. அப்போதிலிருந்து வினோத் காம்ப்ளி உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.
இந்த நிலையில், வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் இருக்கும்படி காணொளிகள் வெளியாகின. உடல்நலக் குறைவு காரணமாக தானேவிலுள்ள ஆக்ரிதி மருத்துவமனையில் அவர் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இவருடைய உடல்நிலை குறித்து மருத்துவர் விவேக் திவிவேதி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"வினோத் காம்ப்ளி சனிக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீட்டில் அவருக்குத் தசைப்பிடிப்பு மற்றும் தலைசுற்றல் இருந்தது. காய்ச்சல் மிக அதிகமாக இருந்தது. தசைப்பிடிப்பு காரணமாக நடப்பதற்கு சிரமப்பட்டார்.
அவரைப் பரிசோதனை செய்ததில் சிறுநீர் தொற்று இருந்தது. சோடியம், பொட்டாசியம் குறைபாடுகளும் உள்ளது. இதுவே தசைப்பிடிப்புக்குக் காரணம். மூளையில் ஸ்கேன் செய்து பார்த்ததில், பழைய ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. சமீபத்திய பக்கவாதம் காரணமாக இருக்கலாம். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சீராக உள்ளன. இவருக்கான சிகிச்சை மற்றும் பிசியோதெரபி தொடரும். அவரை இரண்டு, மூன்று நாள்களில் வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். எனினும், அவருடைய மூளைச் செயல்பாடுகள் நிலையானதாக இல்லை" என்றார் மருத்துவர் விவேக்.
வினோத் காம்ப்ளி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "உடல்நிலையில் நான் சற்று முன்னேற்றம் கண்டுள்ளேன். ஒருபோதும் கிரிக்கெட்டை நான் விடமாட்டேன். நான் அடித்த சதங்கள் மற்றும் இரட்டைச் சதங்கள் எனக்கு நினைவில் உள்ளன. எங்களுடையக் குடும்பத்தில் நாங்கள் மூன்று இடக்கை பேட்டர்கள். சச்சின் டெண்டுல்கருக்கு நன்றியுணர்வுடன் இருப்பேன். அவருடைய ஆசி எனக்கு எப்போதும் உண்டு" என்றார் வினோத் காம்ப்ளி.