
ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி என சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த தண்டலத்திலுள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது ஹிந்தி தேசிய மொழி அல்ல என்று அவர் பேசினார்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் மாணவர்கள் உள்ளீர்களா எனக் கேட்ட அஸ்வின், ஹிந்தி மாணவர்களும் உள்ளீர்களா எனக் கேட்டார். இதற்கு, மாணவர்கள் மத்தியிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
உடனடியாக, "ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி என்று சொல்லலாம் என நினைத்தேன்" என்றார் அஸ்வின்.
மேலும், "இந்திய அணியின் கேப்டன் ஆகாமல் போனதற்கு பொறியியல் படிப்பு தான் காரணம். என்னால் முடியாது என்று யாராவது சொன்னால்தான் நான் எழுச்சி பெறுவேன். என்னால் முடியும் என்று சொன்னால் நான் தூங்கிவிடுவேன். இந்திய அணியின் கேப்டன் ஆகலாம் என்று நிறைய பேர் என்னிடம் கூறியதால் தான் நான் தூங்கிவிட்டேன். பொறியியல் படிப்பைச் சேர்ந்தவர்கள் யாரேனும் வந்து உன்னால் கேப்டன் ஆக முடியாது என்று சொல்லியிருந்தால் நான் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பேன்.
உங்கள் வாழ்க்கையில் நிறைய பேர் வந்து உன்னால் முடியாது... முடியாது... முடியாது... என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களால் முடியாது என்று சொல்வதற்குக் கோடி பேர் இருப்பார்கள். ஆனால், உங்களுடைய வாழ்க்கையில் அவர்கள் ஒரு பொருட்டே கிடையாது.
எனவே, பெரிய இலக்கை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை முழுவதும் மாணவராகவே இருங்கள்" என்று மாணவர்களுக்கு அஸ்வின் அறிவுரை வழங்கினார்.