ரஞ்சியைத் தொடர்ந்து சையத் முஷ்டாகிலும் தமிழக அணிக்குத் தோல்வி! | Tamil Nadu |

முதல் இரு ஆட்டங்களில் தோல்வியடைந்த தமிழக அணி, குரூப் டி பிரிவில் 7-வது இடத்தில் உள்ளது.
Varun Chakaravarthy
வருண் சக்ரவர்த்தி (கோப்புப் படம்)ANI
1 min read

ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழக அணி மோசமாக விளையாடியுள்ளது. இதுவரை பங்கேற்ற 5 ஆட்டங்களில் 2-ல் தோற்று 3-ஐ டிரா செய்து 5 புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் 7-வது இடத்தில் உள்ளது. இதனால் மீதமுள்ள 2 ஆட்டங்களில் தமிழக அணி ஜெயித்தாலும் நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாக முடியாத நிலைமையே தற்போது உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தொடங்கிய சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியின் முதல் இரு ஆட்டங்களிலும் தமிழக அணி தோல்வியடைந்துள்ளது. வருண் சக்ரவர்த்தி தலைமையிலான தமிழக அணி, கடந்த புதன் அன்று, ராஜஸ்தானிடம் தோற்றது. 20 ஓவர்களில் 169/8 ரன்கள் எடுத்தது தமிழக அணி. இந்த இலக்கை 16.3 ஓவர்களில் எட்டி எளிதாக வென்றது ராஜஸ்தான்.

வெள்ளியன்று நடைபெற்ற தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக் அணி அபாரமாக பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. பரபரப்பாக முடிந்த இந்த ஆட்டத்தில் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டன. குர்ஜப்நீத் சிங் வீசிய பந்தை சிக்ஸர் அடித்து தனது அணிக்கு வெற்றியை அளித்தார் ஹிம்மத் சிங்.

இதனால் முதல் இரு ஆட்டங்களில் தோல்வியடைந்த தமிழக அணி, குரூப் டி பிரிவில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 5 ஆட்டங்கள் மீதமுள்ளன.

logo
Kizhakku News
kizhakkunews.in