ஹெட்மயர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி!

கடைசி ஓவரில் முதலிரு பந்துகளை அட்டகாசமாக யார்க்கரில் வீசி ரன்களைக் கொடுக்காத அர்ஷ்தீப், அடுத்த பந்தில் யார்க்கரை நூலிழையில் தவறவிட்டார்.
ஹெட்மயர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி!
ANI

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஹெட்மயர் அதிரடியாக விளையாட, ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இரு அணிகளிலும் இன்று நிறைய மாற்றங்கள் இருந்தன. பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவன் காயம் காரணமாக விளையாடவில்லை. இவருக்குப் பதில் அதர்வா டெய்ட் சேர்க்கப்பட்டார். காயத்திலிருந்து குணமடைந்த லிவிங்ஸ்டன் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

ராஜஸ்தானில் லேசான காயம் காரணமாக பட்லர் மற்றும் அஸ்வின் விளையாடவில்லை. இவர்களுக்குப் பதில் ரோவ்மன் பவல் மற்றும் டனுஷ் கோடியன் விளையாடினார்கள்.

தொடக்க பேட்டர்கள் டெய்ட் மற்றும் பேர்ஸ்டோ முதல் 3 ஓவர்களில் 26 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தைத் தந்தார்கள். அவேஷ் கான் தனது முதல் ஓவரிலேயே டெய்டை வீழ்த்தினார். பவர்பிளேயின் கடைசி மூன்று ஓவர்களில் ராஜஸ்தான் ஆதிக்கம் செலுத்தியதால், பஞ்சாப் 6 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவர்பிளே முடிந்தவுடன் பந்துவீச வந்த சஹால் பிரப்சிம்ரனையும், மஹாராஜ் பேர்ஸ்டோவையும் வீழ்த்தினார்கள். கேப்டன் பொறுப்பை ஏற்ற சாம் கரனும் 6 ரன்களுக்கு மஹாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

10 ஓவர்களில் பஞ்சாப் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. அடுத்த 5 ஓவர்களிலும் விக்கெட்டை பாதுகாக்க நிதானமாக விளையாடியதால் 15 ஓவர்கள் முடிவில் 86 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.

குல்தீப் சென் வீசிய 16-வது ஓவரில் ஜிதேஷ் சர்மா ஒரு சிக்ஸர் அடித்து ஓவரை தொடங்க, லிவிங்ஸ்டன் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஓவரை நிறைவு செய்தார். கடைசி வரை நின்று அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் அடுத்த ஓவரிலேயே 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

14 பந்துகளில் 21 ரன்கள் விளாசிய லிவிங்ஸ்டன் 18-வது ஓவரில் ரன் அவுட் ஆனார். எனினும், நடப்பு பருவத்தில் பஞ்சாபுக்காகக் கலக்கி வரும் அஷுதோஷ் சர்மா இந்த ஆட்டத்திலும் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த அஷுதோஷ் இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.

148 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தானுக்குத் தொடக்கம் நிதானமாகவே இருந்தது. ஜெய்ஸ்வால் சற்று ஃபார்முக்கு திரும்பினாலும், கோடியானால் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாட முடியவில்லை.

பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது. 31 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த கோடியான் லிவிங்ஸ்டன் சுழலில் ஆட்டமிழந்தார். பெரிய இன்னிங்ஸுக்கான அடித்தளத்தை அமைத்து வைத்திருந்தார் ஜெயிஸ்வால். 10 ஓவர்களில் அந்த அணி 66 ரன்கள் எடுத்தது.

விக்கெட்டுகள் வீழ்த்துவதற்காக ரபாடாவை 4 ஓவர்களையும் முன்கூட்டியே வீச அழைத்தார் கேப்டன் சாம் கரன். இதற்குப் பலனாக 12-வது ஓவரில் ஜெயிஸ்வாலையும் (39), 14-வது ஓவரில் சஞ்சு சாம்சனையும் (18) அவர் வீழ்த்தினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், பராக் மற்றும் ஜுரெல் சற்று நிதானித்தார்கள். அதற்குள் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 10-ஐ தொட்டது. கடைசி 4 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட, ஒரு சிக்ஸர் கொடுத்தாலும், பராக் விக்கெட்டை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங்.

18-வது ஓவரில் ஜுரெலை ஹர்ஷல் படேல் வீழ்த்த ஆட்டம் பரபரப்பானது. 14 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட, இந்த ஓவரின் கடைசி இரு பந்துகளில் ஹெட்மயர் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்தார். சாம் கரன் வீசிய 19-வது ஓவரின் முதலிரு பந்துகளில் ரோவ்மன் பவல் இரு பவுண்டரிகளை அடித்தார். ஆட்டம் மீண்டும் அப்படியே ராஜஸ்தான் பக்கம் திரும்பி 10 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

எனினும், சாம் கரன் ஷார்ட் பந்தை வீச பவல் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் மேற்கொண்டு பவுண்டரிகள் போகவில்லை, மஹாராஜும் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட, ஸ்டிரைக்கில் ஹெட்மயர் இருந்தார். முதலிரு பந்துகளை அட்டகாசமாக யார்க்கரில் வீசி ரன்களைக் கொடுக்காத அர்ஷ்தீப், அடுத்த பந்தில் நூலிழையில் யார்க்கரை தவறவிட்டார், சிக்ஸரானது. கடைசி இரு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட, ஃபுல்டாசாக வீசினார் அர்ஷ்தீப். ஃபைன் லெக்கில் சிக்ஸர் அடித்து ராஜஸ்தானை வெற்றியை உறுதி செய்தார் ஹெட்மயர்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in