ஐபிஎல் மெகா ஏலத்தை வழிநடத்திய மல்லிகா சாகர் செய்த தவறால் குஜராத் அணி கூடுதலாக ரூ. 25 லட்சமும், ஹைதராபாத் அணி கூடுதலாக ரூ. 20 லட்சமும் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் நவ. 24 மற்றும் நவ. 25 என இரு நாள்களாக செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு, ஐபிஎல் ஏலத்தை வழிநடத்திய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்த மல்லிகா சாகர், தொடர்ந்து 2-வது முறையாக ஐபிஎல் ஏலத்தை வழிநடத்தினார். அவர் செய்த இரு தவறுகளால் அணிகள் கூடுதலாக செலவு செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இங்கிலாந்தின் அதிரடி பேட்டர் ஜாஸ் பட்லரைத் தேர்வு செய்ய லக்னௌ, குஜராத் அணிகள் மோதிய போது, ஒரு கட்டத்தில் ரூ. 15.50 கோடிக்கு அவரைத் தேர்வு செய்ய குஜராத் அணி தயாராக இருந்தது. ரூ. 15.75 கோடிக்கு தேர்வு செய்ய லக்னௌ அணியிடம் சம்மதம் கேட்டார் மல்லிகா சாகர். ஆனால் லக்னௌ அணி அதனை மறுத்தது. இதனால் பட்லர் 15.50 கோடிக்குத் தேர்வானதாக அறிவிப்பதற்குப் பதிலாக ரூ. 15.75 கோடிக்குத் தேர்வானதாக அறிவித்தார் மல்லிகா சாகர். இதனால், குஜராத் அணி 25 லட்சம் ரூபாயைக் கூடுதலாக செலுத்தி பட்லரை தேர்வு செய்தது.
இதே போல அபினவ் மனோகர் பெயர் ஏலத்துக்கு வந்த போதும் சன்ரைசர்ஸ் அவரை 2.80 கோடிக்குத் தேர்வு செய்ததாக மல்லிகா அறிவித்தார். பிறகு ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்ய கேகேஆர் தயாராக இருந்ததை, தான் கவனிக்கவில்லை என மீண்டும் ஏலத்தைத் தொடர்ந்தார். கடைசியில் அவரை 3.20 கோடிக்கு தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்.