
தென்னாப்பிரிக்க அதிரடி பேட்டர் ஹெயின்ரிக் கிளாசென் (33) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்காக 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் கிளாசென். அதிரடியான விக்கெட் கீப்பிங் பேட்டரான கிளாசென், இன்றைய தேதியில் உலகின் தலைசிறந்த வெள்ளைப் பந்து கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவர்.
தென்னாப்பிரிக்காவுக்காக 60 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 43.69 சராசரியில் 4 சதங்கள், 11 அரை சதங்கள் உள்பட 2,141 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 117.05. சர்வதேச டி20யில் 58 ஆட்டங்களில் மிகச்சரியாக 1,000 ரன்கள் எடுத்துள்ளார்.
33 வயதே ஆன கிளாசென், ஓய்வு பெறுவது பற்றி முடிவெடுக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதுவே தனக்கும் தனது குடும்பத்தின் எதிர்காலத்துக்கும் சரியான முடிவாக இருக்கும். இதன் மூலம் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடுவதை எதிர்நோக்கியிருப்பதாக தனது பதிவில் கிளாசென் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் கிளாசென் ரூ. 23 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டார். ஐபிஎல் 2025-ல் சன்ரைசர்ஸின் கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்து யூசுப் பதான் சாதனையை சமன் செய்தார். இவர் ஏற்கெனவே ஐபிஎல் தவிர எஸ்ஏ20, மேஜர் லீக் கிரிக்கெட், சிபிஎல், ஆடவர் 100 உள்ளிட்ட டி20 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதன் மூலம், உலகெங்கும் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் கிளாசெனால் அதிகளவில் பங்கேற்க முடியும்.
தென்னாப்பிரிக்காவுக்காக 4 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியுள்ள கிளாசென், டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்தார்.
விராட் கோலி - டெஸ்டிலிருந்து ஓய்வு
ரோஹித் சர்மா - டெஸ்டிலிருந்து ஓய்வு
ஏஞ்சலோ மேத்யூஸ் - டெஸ்டிலிருந்து ஓய்வு
ஸ்டீவ் ஸ்மித் - ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
கிளென் மேக்ஸ்வெல் - ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
மார்கஸ் ஸ்டாய்னிஸ் - ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
ஹெயின்ரிக் கிளாசென் - சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு