
சிட்னி டெஸ்டில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவது குறித்து தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. டெஸ்டுக்கு முந்தைய நாள் இரு அணிகள் சார்பாக கேப்டன்கள் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம்.
ஆஸ்திரேலியா சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் பேட் கம்மின்ஸ், அந்த அணியின் விளையாடும் லெவன் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மோசமான ஃபார்மில் உள்ள மிட்செல் மார்ஷ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் அறிமுக ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளதாக கம்மின்ஸ் அறிவித்தார்.
இந்திய அணி சார்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்குப் பதில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களைச் சந்தித்தார். பிரிஸ்பேன் டெஸ்டுக்கு முன்பும் ரோஹித் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆனால் அன்றைய நாள் அவர் பயிற்சியில் பங்கெடுக்க வரவில்லை. சிட்னி டெஸ்டுக்கு முன்பு பயிற்சிக்காக வந்திருந்தபோதும், ரோஹித் சர்மா செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.
அணியில் ரோஹித் சர்மாவின் இடம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் பங்கெடுக்காதது சந்தேகத்தை வலுப்படுத்தியது.
செய்தியாளர்கள் சந்திப்பிலும் ரோஹித் சர்மா விளையாடுவது குறித்த கேள்விக்கு, கம்பீர் நேரடியாக எதுவும் கூறவில்லை.
"ரோஹித்தைப் பொறுத்தவரை எதுவும் பிரச்னையில்லை. கேப்டன் தான் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என எந்தப் மரபும் கிடையாது. தலைமைப் பயிற்சியாளர் நான் வந்துள்ளேன். அதுவே போதுமானது. ஆடுகளத்தைப் பார்த்த பிறகே விளையாடும் லெவன் குறித்து முடிவு செய்யவுள்ளோம்" என்றார்.
அணியில் ரோஹித்தின் இடம் குறித்து கம்பீர் உறுதிபடத் தெரிவிக்காதது, சிட்னியில் அவர் விளையாடுவது குறித்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தற்போதைய பிஜிடி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி பெர்த்தில் வென்றபோதிலும், ரோஹித் சர்மா தலைமையில் அடுத்த மூன்று டெஸ்டுகளில் ஒரு வெற்றியைக் கூட இந்திய அணி பெறவில்லை. அவருடைய பேட்டிங் ஃபார்மும் (பிஜிடி தொடரில் பேட்டிங் சராசரி 6.2) மிக மோசமாக உள்ளது.
எனவே, ரோஹித் விளையாடாத பட்சத்தில் இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சிட்னி டெஸ்டிலிருந்து ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகியுள்ளதை மட்டும் கம்பீர் தெரிவித்தார். ஆகாஷ் தீபுக்குப் பதில் ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா களமிறங்கலாம்.
ஒருவேளை ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில், தொடக்க பேட்டராக கேஎல் ராகுல் விளையாடுவார். மெல்போர்ன் டெஸ்டிலிருந்து நீக்கப்பட்ட ஷுப்மன் கில் மூன்றாவது வரிசையில் களமிறங்கலாம்.