
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்டுகள், 5 டி20 கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டௌனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 180 ரன்களும் மேற்கிந்தியத் தீவுகள் 190 ரன்களும் எடுத்தன. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும் பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். முதலிரு நாள்களில் ஆஸ்திரேலியாவுக்குக் கடும் போட்டியாகத் திகழ்ந்தது மேற்கிந்தியத் தீவுகள்.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹெட் மற்றும் வெப்ஸ்டர் மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைச் சோதித்தார்கள். ஆஸ்திரேலிய அணியின் முன்னிலை மெல்ல மெல்ல உயர்ந்தது. டிராவிஸ் ஹெட் முதலில் அரை சதம் அடித்தார். இவர் 61 ரன்கள் எடுத்து ஷமார் ஜோசஃப் பந்தில் ஆட்டமிழந்தார்.
அலெக்ஸ் கேரி வந்தவுடன் வேகமாக விளையாடினார். வெப்ஸ்டரும் அரை சதம் அடித்து 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகளை இழந்தாலும் ஆஸ்திரேலியா 200 ரன்களை தாண்டியது. இந்த முன்னிலை 250 ரன்களை கடக்க உதவினார் கேரி. அலெக்ஸ் கேரியும் அரை சதம் அடித்து 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கீழ்வரிசை பேட்டர்கள் ஓரளவுக்கு ரன் சேர்த்து ஆஸ்திரேலியா 300 ரன்கள் கடப்பதை உறுதி செய்தார்கள். ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை எடுத்த ஷமர் ஜோசப் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம், 301 ரன்கள் என்ற கடின இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. ஜாஷ் ஹேசில்வுட்டின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்கள் சரணடைந்தார்கள். 86 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. ஷமார் ஜோசப் பேட்டிங்கிலும் ஆஸ்திரேலியாவுக்கு வில்லனாக இருந்தார். 22 பந்துகளில் தலா 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷமார் ஜோசஃப். ஜஸ்டின் கிரீவ்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இரு அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் செயின்ட் ஜார்ஜில் ஜூலை 3 அன்று தொடங்குகிறது.