ரஞ்சி கோப்பையில் கேரளத்துக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஹரியாணா வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ரஞ்சி கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள கேரளம், ஹரியாணா அணிகள் ரோஹ்தகில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹரியாணா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் கேரளம் 8 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்திருந்தது.
அரை சதம் அடித்த நான்கு கேரள வீரர்கள் உள்பட 8 விக்கெட்டுகளையும் அன்ஷுல் கம்போஜ் வீழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. 9-வது விக்கெட்டாக பசில் தம்பி விக்கெட்டை வீழ்த்தி சாதனையை நெருங்கினார் கம்போஜ். இறுதியாக ஷௌன் ரோஜரையும் வீழ்த்தி சாதனை படைத்தார் அன்ஷுல் கம்போஜ்.
30.1 ஓவர்கள் வீசிய அன்ஷுல் கம்போஜ் 49 ரன்கள் கொடுத்து அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ரஞ்சியில் ஒரு இன்னிங்ஸில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை கம்போஜ் படைத்தார். முதல் தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்:
10/20 - பிரேமன்சு சாட்டர்ஜி - பெங்கால் vs அசாம் (1956-57)
10/49 - அன்ஷுல் கம்போஜ் - ஹரியாணா vs கேரளம் (2024-25)
10/78 - பிரதீப் சுந்தரம் - ராஜஸ்தான் vs விதர்பா (1985-86)
முதல்தர கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்:
10/20 - பிரேமன்சு சாட்டர்ஜி - பெங்கால் vs அசாம் (1956-57)
10/46 - தேபாசிஸ் மோஹன்டி - கிழக்கு மண்டலம் vs தெற்கு மண்டலம் (2000-01)
10/49 - அன்ஷுல் கம்போஜ் - ஹரியாணா vs கேரளம் (2024-25)
10/74 - அனில் கும்ப்ளே - இந்தியா vs பாகிஸ்தான் (1999)
10/78 - பிரதீப் சுந்தரம் - ராஜஸ்தான் vs விதர்பா (1985-86)
10/78 - சுபாஷ் குப்தா - பாம்பே vs பாகிஸ்தான் ஒருங்கிணைந்த சேவைகள் மற்றும் பஹாவல்பூர் XI (1954-55)
அண்மையில் துலீப் கோப்பையிலும் ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்திருந்தார். துலீப் கோப்பையில் 8 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.