ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் ஜாஸ் பட்லர் விலகியதையடுத்து, ஹாரி புரூக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரில் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதையடுத்து, இரு அணிகளும் கோப்பையைப் பகிர்ந்துகொண்டன.
இதைத் தொடர்ந்து, 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 29 வரை நடைபெறுகிறது.
இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் நீண்ட நாள்களாகக் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இவர் இன்னும் களத்துக்குத் திரும்பவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இவர் விலகியதால், ஃபில் சால்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
இந்த நிலையில், ஒருநாள் தொடரிலிருந்தும் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார். இவருக்குப் பதில் புதிய கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் ஒருநாள் தொடரில் இடம்பிடிக்காமல் இருந்தார். பட்லரின் காயம் தற்போது லிவிங்ஸ்டனுக்கு வழிவகுத்துள்ளது.
ஹாரி புரூக் முதன்முறையாக இங்கிலாந்தை வழிநடத்தவுள்ளார். எதிர்காலத்தில் முழுநேர கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் ஹாரி புரூக் இளம் வயதிலிருந்தே தலைமைப் பொறுப்புக்குத் தயார்படுத்தப்பட்டு வருகிறார்.
2018-ல் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வழிநடத்தினார். 2022-ல் டி20 பிளாஸ்ட் போட்டியில் யார்க்ஷைர் அணியை 4 ஆட்டங்களில் வழிநடத்தினார். நடப்பாண்டில் தி ஹண்டரட் போட்டியில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியை வழிநடத்தினார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆலி பாப் கேப்டனாக செயல்பட்டார். இவர் துணை கேப்டனாக செயல்பட்டார்.