பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் தனது முதல் முச்சதத்தைப் பதிவு செய்துள்ளார் ஹாரி புரூக்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் முல்தானில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 151 ரன்கள் அடித்தார்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
ஆரம்பம் முதல் வேகமாக ரன்களைச் சேர்த்த இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 492 ரன்கள் எடுத்தது.
இதன் பிறகு 4-வது நாளின் தொடக்கத்தில் இருந்தே ரூட் - புரூக் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இருவரும் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்கள். ரூட் 17 பவுண்டரிகளுடன் 262 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதன் பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல்முறையாக முச்சதத்தைப் பதிவு செய்தார் ஹாரி புரூக்.
கடைசியாக, 2019-ல் டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு முச்சதம் அடித்து அசத்தியுள்ளார் ஹாரி புரூக்.
310 பந்துகளில் முச்சதம் அடித்த இவர், அதிவேகமாக முச்சதம் அடித்த 2-வது வீரர் எனும் பெருமையையும் பெற்றார். (சேவாக் - முதலிடம், 278 பந்துகளில் முச்சதம்).
3 சிக்ஸர்கள், 29 பவுண்டரிகளுடன் 317 ரன்கள் எடுத்து ஹாரி புரூக் வெளியேறினார்.