
தில்லி கேபிடல்ஸ் வீரர் ஹாரி புரூக் ஐபிஎல் 2025 போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஹாரி புரூக் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதன் மூலம், இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ. 6.25 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக். ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 15-க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், போட்டியிலிருந்து விலகியுள்ளார் ஹாரி புரூக்.
சாம்பியன்ஸ் கோப்பை தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்து வெள்ளைப் பந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு அடுத்தபடியாக ஹாரி புரூக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வருகின்றன.
எனவே, இங்கிலாந்து கேப்டனாகம் பொருட்டு பணிச்சுமையைக் கருத்தில்கொண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியிருக்கலாம் எனத் தெரிகிறது.
வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துவிட்டு, ஏலத்தில் எடுக்கப்பட்டவுடன், போட்டி தொடங்குவதற்கு முன்பு கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினால் அடுத்த இரு ஐபிஎல் ஏலத்தில் பங்கெடுக்க முடியாது என்கிற விதியை ஐபிஎல் 2025-க்கு முன்பு பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.
இந்த விதி காரணமாக அடுத்த இரு ஐபிஎல் ஏலத்தில் புரூக்கால் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது.
ஐபிஎல் 2024-ன் போது தில்லி கேபிடல்ஸ் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார் ஹாரி புரூக். கடந்த முறை போட்டி தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்பு அவருடையப் பாட்டியின் மறைவு காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார்.