டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு | T20 World Cup |

2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் அரையிறுதியில் தோற்றது இங்கிலாந்து.
Harry Brook led England Squad announced for T20 World Cup
ஹாரி புரூக் (கோப்புப்படம்)
2 min read

டி20 உலகக் கோப்பைக்கான ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 டெஸ்டுகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து தொடரைக் கைப்பற்றியுள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஆஷஸைத் தொடர்ந்து, இலங்கைக்குப் பயணம் செய்யும் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன்பிறகு, டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கிறது.

இலங்கை டி20 தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு எதிர்பார்த்தபடியே ஒரே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், இலங்கை டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. நேரடியாக டி20 உலகக் கோப்பையில் விளையாடுகிறார்.

இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் விளையாடும் பிரைடன் கார்ஸ் இலங்கை டி20 தொடரில் விளையாடுகிறார். இலங்கை டி20 தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பையில் பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தவிர்த்து வேறு மாற்றம் இல்லை.

ஜாஷ் டங் டெஸ்டில் மட்டுமே விளையாடியிருக்கிறார். டி20 அணியில் இடம்பெற்றுள்ளதன் மூலம், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார் ஜாஷ் டங். ஜேமி ஸ்மித் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை மற்றும் இலங்கை டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி

ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அஹமது, ஜோஃப்ரா ஆர்ச்சர் (டி20 உலகக் கோப்பைக்கு மட்டும்), டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தெல், ஜாஸ் பட்லர், பிரைடன் கார்ஸ் (இலங்கை பயணத்துக்கு மட்டும்), சாம் கரன், லியம் டாசன், பென் டக்கெட், வில் ஜேக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், ஃபில் சால்ட், ஜாஷ் டங், லுக் வுட்.

ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி

ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அஹமது, டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தெல், ஜாஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், ஸாக் கிராலே, சாம் கரன், லியம் டாசன், பென் டக்கெட், வில் ஜேக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், ஜோ ரூட், லுக் வுட்.

டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், நேபாளம், இத்தாலி ஆகிய அணிகளுடன் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது இங்கிலாந்து. முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 8 அன்று நேபாளத்தை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணி இதற்கு முன்னதாக 2010 மற்றும் 2022-ல் டி20 உலகக் கோப்பையை வென்றது. 2024-ல் இந்தியாவிடம் அரையிறுதியில் தோற்றது.

T20 World Cup | T20 World Cup 2026 | Team England | England Squad | Harry Brook | Josh Tongue | Jofra Archer | Brydon Carse | Ben Duckett |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in