இங்கிலாந்து வெள்ளைப் பந்து கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்

சாம்பியன்ஸ் கோப்பை தோல்விக்குப் பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து ஜாஸ் பட்லர் விலகினார்.
இங்கிலாந்து வெள்ளைப் பந்து கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்
ANI
1 min read

இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஹாரி புரூக்(26) நியமிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தோல்விக்குப் பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து ஜாஸ் பட்லர் விலகினார்.

ஒருநாள் மற்றும் டி20யில் இங்கிலாந்தின் துணை கேப்டனாக இருந்தார் ஹாரி புரூக். கடந்த செப்டம்பரில் ஜாஸ் பட்லர் இல்லாத நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து கேப்டனாக செயல்பட்டார். இதில் இங்கிலாந்து இரு ஆட்டங்களில் வெற்றி கண்டு, மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்தது.

மேலும் 2018 உலகக் கோப்பையில் 19 வயதுக்குள்பட்டோருக்கான இங்கிலாந்து அணியை அவர் வழிநடத்தினார். தி ஹண்டரடில் நார்தெர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியையும் வழிநடத்திய அனுபவம் உள்ளது.

ஜாஸ் பட்லரின் விலகலுக்குப் பிறகு ஹாரி புரூக் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கேற்ப ஐபிஎல் போட்டியிலிருந்து புரூக் விலகினார்.

தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ. 6.25 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார் புரூக். இங்கிலாந்து கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்பதால், பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு போட்டி தொடங்குவதற்கு 15 நாள்களுக்கும் குறைவான நாள்கள் இருந்த நேரத்தில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து வெள்ளைப் பந்து கேப்டனாக ஹாரி புரூக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மே இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொள்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர்கள் மூலம் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்கிறார் புரூக்.

"இங்கிலாந்து வெள்ளைப் பந்து கேப்டனாக பொறுப்பேற்பது உண்மையில் பெருமை மிக்கது. ஒவ்வொரு நிலையிலும் உதவிய குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி" என்று புரூக் தெரிவித்துள்ளார்.

ஹாரி புரூக் இங்கிலாந்துக்காக 26 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 34 சராசரியில் 816 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20யில் 44 ஆட்டங்களில் விளையாடி 28.5 சராசரியில் 798 ரன்கள் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in