அரையிறுதியில் போராடித் தோற்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

ஜெர்மனியிடம் 2-3 எனத் தோற்ற இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயினுடன் விளையாடவுள்ளது.
அரையிறுதியில் போராடித் தோற்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி!
அரையிறுதியில் போராடித் தோற்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி!ANI
1 min read

ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்துள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஆடவர் ஹாக்கியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதின.

ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் சிறப்பான ஒரு கோலை அடிக்க இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த ஒலிம்பிக்ஸில் ஹர்மன்பிரீத் சிங் அடித்த 7-வது கோலாக இது அமைந்தது. முதல் பகுதியான 15-வது நிமிடத்தின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க அதனை கோலாக மாற்றினார் பெய்லட். எனவே ஜெர்மனி அணி 1-1 என்ற கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தது.

இதைத் தொடர்ந்து 27-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் மூலம் ஜெர்மனி அணி மீண்டும் ஒரு கோலை அடிக்க 2-வது பகுதியான 30-வது நிமிடத்தின் முடிவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி கோலாக மாற்றினார் சுக்ஜீத் சிங். இதன் மூலம் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இதைத் தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 3-வது பகுதியான 45-வது நிமிடத்தின் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

4-வது பகுதியின் தொடக்கத்தில் ஜெர்மனி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க அதனை சிறப்பாக தடுத்தார் சஞ்சய்.

ஆட்டம் முடிய 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் ஜெர்மனி வீரர் மார்கோ மிக்கவ் அற்புதமான ஒரு கோலை அடிக்க ஜெர்மனி அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிய 2 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் இந்தியாவின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் மாற்று வீரராக வெளியேறினார்.

இறுதிவரை போராடிய இந்திய அணியால் மற்றொரு கோலை அடிக்க முடியவில்லை. எனவே, ஜெர்மனி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இதனால் இந்திய அணி தங்கம் அல்லது வெள்ளி என முக்கியமான பதக்கங்களில் ஒன்றை தவறவிட்டது.

இந்நிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதவுள்ளது.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in