குடும்பத்தை விமர்சித்தால் ஏற்றுக் கொள்ளமாட்டேன்: காணொளி விவகாரம் குறித்து ஹாரிஸ் ராஃப்

“என்னுடைய குடும்பம் குறித்தோ அல்லது எனது பெற்றோர்கள் குறித்தோ விமர்சித்தால் நான் அதற்கு ஏற்ற பதிலை அளிப்பேன்”.
ஹாரிஸ் ராஃப்
ஹாரிஸ் ராஃப்ANI

பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் ரசிகர் ஒருவரை ஆக்ரோஷமாக தாக்கச் சென்ற காணொளி வைரலான நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய பெரிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃபுக்கும் ஒரு சில ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ளார் ஹாரிஸ் ராஃப்.

ஹாரிஸ் ராஃப் கூறியதாவது:

“இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால், தற்போது பேச வேண்டிய நிலைமை வந்துவிட்டது. ஒரு கிரிக்கெட் வீரராக ரசிகர்களின் கருத்துகளை வரவேற்கிறேன். அவர்கள் எங்களை பாராட்டலாம், விமர்சனமும் செய்யலாம்.

ஆனால், என்னுடைய குடும்பம் குறித்தோ அல்லது எனது பெற்றோர்கள் குறித்தோ விமர்சித்தால் நான் அதற்கு ஏற்ற பதிலை அளிப்பேன். எந்த துறையில் இருந்தாலும் சரி, ஒருவருக்கு மரியாதை அளிப்பது மிகவும் அவசியம்” என்றார்.

நடப்பு டி20 உலகக் கோப்பையில் 4 ஆட்டங்களில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஹாரிஸ் ராஃப்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in