வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ரோஹித் சர்மா, அணியில் மாற்றம் எதுவும் செய்யாமல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மஹேதி ஹசன் மற்றும் ஷகிப் அல் ஹசனைக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கியது வங்கதேசம். முதல் ஓவரின் கடைசிப் பந்தையும், இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தையும் ரோஹித் பவுண்டரி அடித்தார். ஷகிப் வீசிய இரண்டாவது ஓவரில் கோலியும் ஒரு சிக்ஸர் அடித்து அதிரடிக்கான முனைப்பைக் காட்டினார்.
இருவரும் அதிரடியாக விளையாட, இந்திய அணி 3.3 ஓவர்களில் 39 ரன்களை எட்டியது. 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
ரிஷப் பந்த் நேரம் எடுத்துக்கொள்ள, கோலி அதிரடியாக விளையாடினார். 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 53 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி வந்த கோலி, ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் 3,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த கோலி, தன்ஸிம் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி, இரண்டாவது பந்தில் கீப்பரிடம் கேட்ச் ஆனார். 10 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்தது.
ஷிவம் துபே நேரம் எடுத்துக்கொள்ள, பந்த் அதிரடிக்கு மாறினார். முஸ்தபிஸூர் ரஹ்மான் ஓவரில் இரு பவுண்டரி ஒரு சிக்ஸரும், ரிஷத் ஹொசைன் ஓவரில் ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடித்தார். இதைப் பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 36 ரன்களுக்கு மீண்டும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார். இவரது அதிரடி ஆட்டம் சற்று திருப்புமுனையை உண்டாக்கியது.
ஹார்திக் பாண்டியாவும், துபேவும் அடுத்த இரு ஓவர்களுக்கு அமைதி காத்தார்கள். 15-வது ஓவரிலிருந்து இருவரும் அதிரடி காட்டத் தொடங்கினார்கள். 17-வது ஓவரில் இந்திய அணி 150 ரன்களை தாண்டியது. ரிஷத் ஹொசைன் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடித்த துபே அடுத்த பந்திலேயே 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். துபே - பாண்டியா இணை 34 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தது.
எனினும், ஹார்திக் பாண்டியா கடைசிக் கட்ட அதிரடிக்கான பொறுப்பை ஏற்று வங்கதேச பந்துவீச்சாளர்களை நொறுக்கினார். குறிப்பாக கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய பாண்டியா இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் அரை சதத்தை எட்டினார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் விளாசியது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாண்டியா 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
197 ரன்கள் என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காதபோதிலும், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை தொடக்க பேட்டர்களால் அடைய முடியவில்லை. அர்ஷ்தீப் வீசிய மூன்றாவது ஓவரில் இரு பவுண்டரிகள், அக்ஷர் படேல் வீசிய 4-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்து அதிரடிக்கு சற்று மாறத் தொடங்கியது வங்கதேசம்.
ஹார்திக் பாண்டியா சிக்ஸரை கொடுத்தாலும், லிட்டன் தாஸ் விக்கெட்டை வீழ்த்தி விக்கெட்டுகளுக்கான அடித்தளத்தை அமைத்தார்.
இந்த உலகக் கோப்பையில் வங்கதேச தொடக்க பேட்டர்கள் மொத்தமாக 27 பந்துகளில் 13 ரன்களை எடுத்த நிலையில், இந்த ஆட்டத்தில் மட்டும் 27 பந்துகளில் 35 எடுத்தது வங்கதேசத்துக்கு ஆறுதலாக அமைந்தது.
பவர்பிளேயில் பும்ரா இரண்டாவது ஓவரை வீசினார். இவரது ஓவரில் விக்கெட் விழுந்திருக்க வேண்டும். ஆனால், தன்ஸித் ஹசன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரிஷப் பந்த் தவறவிட்டார். 6 ஓவர்களில் அந்த அணி 42 ரன்கள் எடுத்தது.
சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தவுடன் வங்கதேசத்தின் ரன் வேகம் மேலும் சரிவடைந்தது. குறிப்பாக குல்தீப் யாதவ் பந்தை சரியாகக் கணிக்க முடியாமல் திணறினார்கள். தொடக்க பேட்டர் தன்ஸித் ஹசன் (29 ரன்கள்), தௌஹித் ஹிரிதாய் (4), ஷகிப் அல் ஹசன் (11) ஆகியோர் குல்தீப் சுழலில் வீழ்ந்தார்கள்.
கேப்டன் ஷாண்டோ மட்டும் பாண்டியா ஓவரில் இரு சிக்ஸர்கள், ஜடேஜா ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து சற்று போராடினார். இருந்தபோதிலும், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டுக்கு ஏற்ப இவரால் அதிரடி காட்ட முடியவில்லை. கடைசி 5 ஓவர்களில் 89 ரன்கள் தேவைப்பட, பும்ரா ஓவரில் ஷாண்டோவும் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அர்ஷ்தீப் சிங் 17-வது ஓவரின் முதல் பந்தில் ஜேகர் அலியை வீழ்த்தினார். ஆட்டம் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணியபோது, அடுத்து களமிறங்கிய ரிஷத் ஹொசைன் அர்ஷ்தீப் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரும், அக்ஷர் படேல் ஓவரில் இரு சிக்ஸர்களும் அடித்து ரோஹித்துக்கு தலைவலி கொடுத்தார்.
உடனடியாக 19-வது ஓவருக்கு பும்ரா அழைக்கப்பட்டார். ரிஷத் 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனுபவ வீரரான மஹமதுல்லா, கடைசி ஓவர் வரை காத்திருந்து அர்ஷ்தீப் பந்தில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்திக்காத அணியாக உள்ளது.
குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பும்ரா 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.