தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டுள்ளார். இதையொட்டி இந்திய வீரர் விராட் கோலி, அவருக்கு உணர்வுபூர்மான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
"ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் நீங்கள் நுழைந்துள்ளதை முன்னிட்டு, இந்தக் கடிதம் எழுதுவது எனக்குக் கிடைத்த பெருமை. இந்த இடத்துக்கு நீங்கள் முழுத் தகுதியுடைவர். முற்றிலும் தனித்துவமான ஒருவர்.
நான் இதுவரை விளையாடியதில் நீங்கள்தான் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர். அனைவரும் உங்களுடையத் திறன் குறித்து பேசுவார்கள். அது சரிதான் என்றாலும், உங்கள் திறமை மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைதான், உண்மையில் எனக்குத் தனியாக தெரிந்தது.
கிரிக்கெட் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை, அப்படியே செய்து முடிக்க முடியும் என்ற அசாத்தியமான நம்பிக்கை உங்களிடத்தில் இருக்கும். இதனால் தான் சிறப்பானவராக இருந்துள்ளீர்கள்.
2016-ல் ஆர்சிபியில் கொல்கத்தாவுக்கு எதிராக இருவரும் இணைந்து பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது நடந்த நிகழ்வைக் காட்டிலும் இதற்கு வேறு சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது.
சுனில் நரைன், மோர்னே மோர்க்கல், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் கொண்ட பந்துவீச்சை எதிர்கொண்டு 184 ரன்களை விரட்டி விளையாடினோம். 70 ரன்கள் எடுத்திருந்தபோது நீங்கள் களமிறங்கி என்னுடன் இணைந்தீர்கள். அப்போது நரைன் பந்துவீசிக் கொண்டிருந்தார்.
நீங்கள் சில ஷாட்கள் விளையாடி அது பேட்டில்படவில்லை. டைம்அவுட்டின்போது, நரைன் பந்துவீச்சைச் சரியாகக் கணித்து விளையாட முடியவில்லை என்று என்னிடம் கூறினீர்கள். நான் சரியாகக் கணித்து விளையாடி வந்ததால், என்னிடம் ஸ்டிரைக்கை கொடுக்குமாறு கூறினேன். அவருடையப் பந்துவீச்சில் நான் சில பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்கலாம் என்பது என் எண்ணம்.
டைம் அவுட்டுக்கு பிறகு நரைன் வீசிய முதல் ஓவரில் எதிர்முனையில் இருந்த நான், நிச்சயமாக ஒரு ரன் தான் எடுப்பீர்கள் என ஸ்டிரைக்குக்கு வர காத்திருந்தேன். என்னுடைய ஆச்சரியத்தை எண்ணிப் பாருங்கள், நீங்கள் லெக் சைடில் நகர்ந்து விளையாடினீர்கள். சுனில் நரைனும் உங்களைப் பின்தொடர்ந்து பந்துவீசினார். ஸ்கொயர் லெக் மேல் 94 மீட்டருக்கு ஸ்லாக் ஸ்வீப் மூலம் சிக்ஸர்.
இதைச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை டைம் அவுட்டில் எது உங்களுக்குக் கொடுத்தது எனத் தெரியவில்லை. நீங்கள் ஒரு வெறியர் என்று உங்களிடம் கூறியது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.
ஏதேனும் பந்துவீச்சாளரின் பந்துவீச்சை என்னால் சரியாகக் கணிக்க முடியாவிட்டால், நான் ஒரு ரன் எடுத்து எதிர்முனைக்குச் சென்றுவிடுவேன். ஆனால், நீங்கள் பந்தைச் சரியாகக் கணிக்காமலே அதை 94 மீட்டருக்கு சிக்ஸர் அடிக்கிறீர்கள். நீங்கள் யார் என்பதை இதுதான் சொல்லும்.
நம் சிந்தனை ஒரு வடிவம் பெறத் தயாராக இல்லாத நேரத்திலேயே, அதைச் செய்து முடித்து, இது எப்படி நடந்தது என அனைவரையும் ஆச்சர்யப்படுத்த வைப்பீர்கள். உங்களுடன் இணைந்து பேட்டிங் செய்ததில் உள்ள நினைவுகளில் இது வெறும் ஒரு நினைவு மட்டுமே.
அனைவரும் உங்களுடைய அதிரடியான ஷாட்களை மட்டுமே நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால், நீங்கள் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்வதிலும் வல்லவர்.
உதாரணத்துக்கு 2015 தில்லி டெஸ்டை எடுத்துக்கொள்ளலாம். டெஸ்டை டிரா செய்வதற்காக 297 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 43 ரன்கள் மட்டும்தான் எடுத்தீர்கள்.
நான் 200 பந்துகள் விளையாடிவிட்டேன், பவுண்டரி அடிக்கலாம் என ஏதேனும் ஓர் இடத்தில் நிச்சயமாக ஆசை எழுந்திருக்கலாம். ஆனால், சூழலுக்கு என்ன தேவை என முடிவு செய்துவிட்டு தயாராகிவிட்டால், நீங்கள் அதை நோக்கி விளையாடிக் கொண்டே இருப்பீர்கள்.
இவை அனைத்தும் உங்கள் திறன் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையையே மீண்டும் காட்டுகிறது. அற்புதமான ஷாட்கள் மட்டுமல்ல, பந்தைத் தடுத்து விளையாடுவதற்கான திறனும் உங்களிடத்தில் உள்ளது. இந்தத் தடுப்பாட்டத் திறன் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
ஹால் ஆஃப் ஃபேமில் இணைவதைவிட வேறு பெரிய பெருமை எதுவும் கிரிக்கெட் வீரருக்கு இருந்துவிட முடியாது. வாழ்த்துகள்" என்று விராட் கோலி எழுதியுள்ளார்.