
நடப்பு உலக சாம்பியன் டிங் லிரன் - குகேஷ் மோதி வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13-வது சுற்று டிரா ஆகியுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் செஸ் உலக சாம்பியனுக்கான போட்டியில் இந்தியாவின் குகேஷும் சீனாவின் டிங் லிரனும் மோதி வருகிறார்கள். 12 சுற்றுகளின் முடிவில் இருவரும் 6-6 என சமநிலையில் இருந்தார்கள். இந்நிலையில் இன்று வெள்ளை நிறக் காய்களில் விளையாடினார் குகேஷ். ஆட்டத்தின் பாதியில் குகேஷின் கை ஓங்கியிருந்தாலும் அருமையான தடுப்பாட்டத்தால் நிலைமையைச் சீராக்கினார் டிங் லிரன். இறுதியில் ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து இருவரும் 6.5-6.5 என சமநிலையில் உள்ளார்கள்.
14-வது மற்றும் கடைசி சுற்று நாளை நடைபெறவுள்ளது. இதில் டிங் லிரன் வெற்றி பெற்றால் உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைப்பார். குகேஷ் வென்றால் செஸ் உலகுக்குப் புதிய உலக சாம்பியன் கிடைப்பார். இந்த ஆட்டமும் டிரா ஆனால் டை பிரேக்கர் முறையில் உலக சாம்பியன் தேர்வு செய்யப்படுவார்.