
நார்வே செஸ் 2025 போட்டியில் இந்திய இளம் வீரர் குகேஷ் உலகின் நெ. 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நார்வே செஸ் 2025 போட்டி மே 26 முதல் ஜூன் 6 வரை நடைபெறுகிறது. உலகின் நெ. 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை 6-வது சுற்றில் எதிர்கொண்டார் உலக சாம்பியன் குகேஷ். இந்த ஆட்டத்தில் பெரும்பாலான நேரம் கார்ல்சனே ஆதிக்கம் செலுத்தி வந்தார். இருந்தபோதிலும், குகேஷ் விடாமுயற்சியோடு கார்ல்சன் வெற்றியைத் தாமதப்படுத்தி வந்தார்.
நேரம் கார்ல்சனுக்கு நெருக்கடியை உண்டாக்கியதா எனத் தெரியவில்லை. தவறான நகர்த்தலை மேற்கொண்டார் கார்ல்சன். விளைவு 62-வது நகர்வில் கார்ல்சனை வீழ்த்தினார் குகேஷ். தோல்வியின் விரக்தியில் மேக்னஸ் கார்ல்சன் மேசையை மிகுந்த ஆக்ரோஷத்துடன் தட்டிச் சென்றார். பிறகு, குகேஷ் முதுகில் தட்டியபடி போட்டி நடைபெற்ற இடத்தைவிட்டு வெளியேறினார் கார்ல்சன். குகேஷ் வெற்றியின் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் குகேஷ். முதலிரு இடங்கலில் நார்வே கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் ஃபேரியானோ உள்ளார்கள்.
பிரக்ஞானந்தாவுக்குப் பிறகு மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் எனும் பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். இத்தனைக்கும் இதே போட்டியில் முதல் சுற்றில் கார்ல்சனிடம் குகேஷ் தோல்வியடைந்திருந்தார்.
வெற்றி குறித்து குகேஷ் கூறியதாவது:
"என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஆட்டத்தில் நான் செய்வதற்குப் பெரிதும் எதுவும் இல்லை. தோல்வியடைந்துவிட்டேன் என்பதே தெளிவாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக நேரம் குறைவாக இருந்த நெருக்கடியில் அவர் சிக்கிக்கொண்டார். 100-ல் 99 முறை நான் தோல்வியடை நேர்ந்திருக்கும். ஆனால், இது அதிர்ஷ்டவசமான நாள். நான் விரும்பிய வழியில் கிடைத்த வெற்றி அல்ல. இருந்தாலும், இந்த வெற்றியை நான் எடுத்துக்கொள்வேன்" என்றார் குகேஷ்.