
சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
18-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் உலக சாம்பியன் ஆனார். கடந்த வாரம் உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷ் இன்று தான் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் குகேஷை வரவேற்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குகேஷ் பயிலும் வேலம்மாள் பள்ளி ஆசிரியர்கள் வருகை தந்திருந்தார்கள். வேலம்மாள் பள்ளி மாணவர்கள் மலர்களுடன் வரவேற்றார்கள்.
உலக செஸ் சாம்பியன் ஆன பிறகு முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார் குகேஷ்.
"இளம் உலக செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது சிறு வயதிலிருந்தே எனக்கு கனவு. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இலக்கை அடைந்து வீடு திரும்பியதில் எனக்கு மகிழ்ச்சி.
வீட்டுக்கு வந்து இரண்டு மணி நேரங்கள்தான் ஆகியுள்ளது. ஆனால், இந்தச் சாதனை நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் எவ்வளவு பெருமை சேர்த்துள்ளது என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி.
இந்தப் போட்டியில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தன. உணர்வுகள் மாறிக்கொண்டே இருந்தன. 14-வது சுற்றில் நான் எதிர்பாராத நேரத்தில் அந்த வெற்றி வரும்போது, அதுவும் நான் டை பிரேக்கர் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, வெற்றி கிடைக்கவுள்ளதை உணர்ந்த தருணம் அற்புதமாக இருந்தது.
டை பிரேக்கருக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது எனக்குத் தெரியும். உயர்நிலையில் செஸ் விளையாடும்போது ஒரு வெற்றியைப் பெறுவதே கடினம். எனவே டை பிரேக்கர் செல்லும் என எதிர்பார்த்தேன்.
இருந்தாலும் 14 சுற்றுகள் என்பதால், எனக்கான வாய்ப்புகள் வரும் என்பதும் எனக்குத் தெரியும். முதல் பகுதி சுற்றுகளின் போது டை பிரேக்கர் குறித்து நான் சிந்திக்கவில்லை. கடைசி கட்டம் நோக்கி நகரும்போது டை பிரேக்கர் போக வாய்ப்புள்ளது என எண்ணினேன். டை பிரேக்கர் சென்றாலும் நல்ல முறையில் விளையாட முடியும் என நம்புகிறேன். எனவே, அதுகுறித்துப் பெரிதும் கவலைகொள்ளவில்லை.
என்னுடைய அணியில் பேடி உப்டன் மிக முக்கியமானவர். கேண்டிடேட்ஸ் வென்ற பிறகு, சந்தீப் சிங்கலிடம் மனநலப் பயிற்சியாளர் வேண்டும் எனக் கேட்டிருந்தேன். அவர் உடனடியாக பேட் உப்டனுடன் அறிமுகம் செய்து வைத்தார். உயர்திறன் வீரர்களுடன் பணியாற்றிய நிறைய அனுபவம் அவருக்கு உள்ளது.
உலக சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரை, இது வெறும் செஸ்ஸை பொறுத்து மட்டும் கிடையாது. நிறைய உளவியல் மற்றும் உணர்வு ரீதியான அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை, பேடி உப்டனுடனான உரையாடல்கள் மற்றும் அவருடையப் பரிந்துரைகள் எனக்கு மிக முக்கியமானவை. ஒரு வீரராக என்னை மேம்படுத்திக்கொள்ள அவை மிக முக்கியமானவை. பேடி உப்டனினி படிப்பினைகள் எனக்கு உதவின" என்றார் குகேஷ்.